ஆன்லைன் கிரிக்கெட் - வீட்டை அடமானம் வைத்து கடனை அடைத்த பெற்றோர்... இளைஞர் தற்கொலை!

0 16478

ன்லைனில் கிரிக்கெட் கேம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, முத்தமிழ் நகர் 6 வது பிளாக்கை சேர்ந்தவர் சுப்பிரமணி. 35 வயதாகும் சுப்பிரமணியின் மகன் தியாகராஜன் ஓட்டேரியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தார். திருமணமாகி மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த தியாகராஜனின் வாழ்க்கையை சோகமயமாக மாற்றியது பணத்தைப் பறிக்கும் ஆன்லைன் கேம்கள். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர்களிடம் சுமார் 6 லட்சம் அளவுக்குக் கடன் வாங்கி ஆன்லைன் கிரிக்கெட் மற்றும் ரம்மி போன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பணம் மொத்தத்தையும் ஆன்லைன் விளையாட்டுகளில் இழந்துள்ளார். இதையடுத்து, தியாகராஜனின் பெற்றோர் வீட்டை விற்று அந்தக் கடனைக் கட்டியுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் வீட்டைப் பறிகொடுத்த போதும் திருந்தாத தியாகராஜன், இழந்த பணத்தை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் எனும் எண்ணத்தில், தனியார் நிதி நிறுவனங்களில் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி மீண்டும் சூதாட்டத்தைத் தொடங்கியுள்ளார். அந்த பணத்தையும் பறிகொடுத்துள்ளார் தியாகராஜன். சரியாக டியூ கட்டாததால் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. மேலும், 6 லட்ச ரூபாய்க்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ரூ. 13 லட்சம் வரை கேட்டு தொல்லை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் தான், தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற தியாகராஜன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த தியாகராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு எதற்கு?” என்று தியாகராஜனின் குடும்பத்தினர் கண்ணீருடன் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments