ஆற்று மணலாக மாறிய களிமண்.. கண்ணில் மண்ணை தூவிய கும்பல்..!
சேலத்தில் போலியாக ஆற்று மணலை தயாரித்து ஜோராக விற்பனை செய்து வந்த மோசடி கும்பல் சிக்கியுள்ளது. எந்திரத்திற்குள் சென்ற களிமண் ஆற்று மணலாக வெளிவந்த மோசடி குறித்த செய்தித் தொகுப்பு இது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் பகுதியில் வசிஷ்ட நதிக்கரையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக போலி மணல் தயாரிக்கப்படுவதாக ஆத்தூர் டி.எஸ்.பி.-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அங்கு சென்ற அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர். இதில், களிமண்ணை ஆற்று மணல் போல் மாற்றி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக வசிஷ்ட நதியில் இருந்து திருட்டுத்தனமாக தண்ணீரையும் உறிஞ்சி எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார், களிமண்ணை ஆற்று மணலாக மாற்றுவதற்கு பயன்படுத்திய சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம், ஜே.சி.பி., டிராக்டர் என கூண்டோடு அத்தனையும் பறிமுதல் செய்தனர்.
சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாய நிலங்களில் இருந்து குறைந்த விலைக்கோ அல்லது திருட்டுத் தனமாகவோ களிமண்ணை அள்ளி வந்து, அதில் தண்ணீர் கலந்து இயந்திரம் மூலம் நைசாக அரைத்து ஆற்று மணல் போல் தயாரித்துள்ளனர். அரைக்கப்பட்ட களிமண்ணை ஆற்றுமணல் எனக்கூறி அரசின் ஒப்பந்ததாரர்களிடம் விற்பனை செய்துவந்துள்ளது அந்த போலி கும்பல்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கனிமவளங்களை திருடுதல், மணல் கொள்ளை, சட்டவிரோதமாக ஆலை நிறுவியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தப்பியோடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், போலி மணலில் தன்மை குறித்து கனிமவளத்துறையின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அண்மையில் ஓசூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் இதேபோன்று போலியாக மணல் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
பணத்துக்கு ஆசைப்பட்டு போலியாக மணல் தயாரித்து வந்த கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. போலி மணலால் கட்டப்படும் கட்டுமான பணிகளின் உறுதித் தன்மையும் இவ்விடத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விபரீதத்துக்கு வழிவகுக்கும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Comments