வேலை பறிபோனதால் ஆத்திரம்... மது வாங்கிக்கொடுத்து முதியவரை வெட்டிக்கொன்றவன் கைது!

0 2359

தாம்பரம் அருகே வேலை பறிபோகக் காரணமான இருந்த முதியவருக்கு மது ஊற்றிக்கொடுத்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் வெட்டப்பட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ராஜாசிங் (67) என்பதும் அவர் தாம்பரம் அடுத்த படப்பை ஆதனூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிவதும் தெரியவந்தது. ராஜாசிங்கைக் கடைசியாகப் பார்த்தவர்கள், ராஜாசிங்குடன் வேலை பார்க்கும் கோவில் ராஜா ((47 )) என்பவரை ஊருக்கு அனுப்புவதற்காகக் கடந்த 31 ம் தேதி பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜான் ராஜா சிங்கை கோவில் ராஜா கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றாரா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெருங்களத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த கோவில் ராஜாவைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஜான் ராஜா சிங்கைக் கொலை செய்ததாகக் கோவில் ராஜா ஒப்புக்கொண்டார்.

வேலை செய்த இடத்தில் கடை உரிமையாளரிடம் ஜான் ராஜாசிங் கோவில் ராஜாவைப் பற்றித் தவறாகக் கூறியதால் அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டனர். வேலை இழந்ததால் வருமானம் ஏதுமின்றி, செலவு செய்யப் பணம் இல்லாமல் கோவில் ராஜா மன உளைச்சலில் தவித்துள்ளார். வேலை பறிபோகக் காரணமாக இருந்த ஜான் ராஜா சிங்கை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவருக்கு மது வாங்கிக்கொடுத்து வெட்டிப் படுகொலை செய்ததாகக் கோவில் ராஜா போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, கோவில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments