சிறுவர்களின் சண்டையை விலக்கிவிட சென்ற முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

நெல்லையில் சிறுவர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கிவிட சென்ற முதியவரை எதிர்பாராதவிதமாக தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பர்க்கிட்மாநகரத்தை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் இர்பான். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று இரவில் இர்பானுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் இடையே இர்பான் வீட்டின் அருகில் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாய்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதனைப்பார்த்த இர்பானின் தாத்தா சர்புதின் மற்றும் சிறுவனின் சித்தப்பா செய்யதுஅலி ஆகியோர் விரைந்து சென்று சிறுவர்களின் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.
அப்போது சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக தள்ளியதில் இர்பானின் தாத்தா சர்புதின் கீழே விழுந்து மயங்கினார். இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சர்புதின் இறந்து விட்டதாக கூறி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று சிறுவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments