‘பசிக்குதா எடுத்துக்கோங்க...’ - காசு இருந்தா ரூ.20 இல்லன்னா ஃப்ரீ... பிரியாணி போடும் கோவை பெண்!

0 15741

கோவையில் ஏழை எளியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க, 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வருகிறார் இல்லத்தரசி ஒருவர். அந்த 20 ரூபாய் கூட கொடுக்கவியலாதவர்களுக்கு இலவசமாகவே பிரியாணியை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

கோவை, புளியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சென்னையைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சப்ரினா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை செய்யும் கடை நடத்திவரும் நிலையில் பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ள சப்ரினா தனது வீட்டின் முன்பு சிறிய அளவில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இயங்கும் இந்த கடையில் ரூ. 20 க்கு பிரியாணி விற்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களாகக் கடைக்கு முன்பு உள்ள பெட்டி ஒன்றில் பிரியாணி பொட்டலங்களை வைத்துள்ள சப்ரினா, அதன் அருகிலேயே, ’பசிக்குதா எடுத்துக்குங்க’ என்று கரும்பலகையில் எழுதி வைத்துள்ளார். அந்தப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பிரியாணி பொட்டலங்களை ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் விலை இல்லாமல் எடுத்துச் சென்று சாப்பிட்டு பசியாறுகின்றனர்.

இதுகுறித்து சப்ரினா, “சாதாரண சாலையோர கடைகளில் குறைந்தது 50 ரூபாயிலிருந்து பிரியாணி விற்கப்படுகிறது. இருப்பினும் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் மதியம் ஒருவேளை மட்டும் 20 ரூபாய்க்கு கடந்த மூன்று மாதங்களாக Empty பிரியாணி விற்று வருகிறோம். அந்த 20 ரூபாயைக் கூட கொடுக்க முடியாதவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பசியாற முடியாத ஏழை எளியவர்கள் மற்றும் ஆதரவற்றோர் பலர் சப்ரினாவின் கடைக்கு வந்து பிரியாணி பொட்டலங்களை நன்றிப் பெருக்குடன் எடுத்துச் செல்கிறார்கள். சப்ரினாவின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பல தரப்பினரும் சப்ரினாவைப் பாராட்டி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments