அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைப்படாத தமிழக சாமானியர்கள்... எங்கு காணிணும் நேர்மை!

ஓசூர் கொள்ளை , சீர்காழி கொலை கொள்ளைகளுக்கு மத்தியில் தமிழகத்தில் சமானியர்களிடத்தில் காணப்படும் நேர்மையான குணங்கள் சற்று ஆறுதலை தருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்களை பார்க்கலாம்.
சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையில் பால் பிரைட் என்பவரின் மகள் திருமணம் நடைபெற்றது. திருமண தினத்தன்று ஆட்டோவில் பயணித்த பால் பிரைட் 50 பவுன் நகை இருந்த பையை தவறவிட்டார். நகை இருந்த பையை கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுநர் சரவண குமார் அரை மணி நேரத்தில் போலீஸிடம் ஒப்படைக்க , திருமண வீட்டில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பியது. ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமாரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், அவருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இதே போல மற்றோரு சம்பவம் சென்னையில் நேற்று நிகழ்ந்துள்ளது. மணலியைச் சேர்ந்த முனியம்மா என்பவர் கொடுங்கையூரில் உள்ள தன் அக்கா வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மதியம் மணிகண்டன் என்பவரின் ஆட்டோவில் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, தான் வைத்திருந்த பையில் ரூ. 2,30,000 பணம் மற்றும் இரண்டு பவுன் நகையை முனியம்மா எடுத்து சென்றுள்ளார். வீட்டில் இறங்கிய முனியம்மா நகை மற்றும் பணம் இருந்த பையை எடுக்க மறந்து ஆட்டோவிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
(ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமாருக்கு விருது வழங்கிய கமிஷனர் )
மணிகண்டன் முனியம்மா வீட்டிலிருந்து கிளம்பி பெரம்பூர் அருகே வந்த போது, ஆட்டோவில் இருந்த பையை கண்டு அதிர்ச்சியடைந்தார். மணிகண்டன் அந்த பை முனியம்மா தவற விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். பையை திறந்து பார்த்தால், நகை மற்றும் பணம் இருந்தது. உடனடியாக, மீண்டும் மணலி நோக்கி ஆட்டோவை செலுத்திய மணிகண்டன், முனியம்மா வீட்டு முன் சென்று ஆட்டோவை நிறுத்தினார்.
பின்னர், அவரிடத்தில் பை குறித்து விசாரித்தார். பையில் உள்ள நகையும் பணமும் தன்னுடையதுதான் என்று கலங்கியபடி முனியம்மா மணிகண்டனிடத்தில் கூறினார். தொடர்ந்து, முனியம்மாவை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற மணிகண்டன், போலீஸார் முன்னிலையில் நகையையும், பணத்தையும் ஒப்படைத்தார். பின்னர், முனியம்மாவை தன் ஆட்டோவிலேயே அழைத்து சென்று அவரின் வீட்டில் விட்டு மணிகண்டன் மன திருப்தியுடன் வீடு திரும்பினார்.
இதே போல இன்னோரு சம்பவமும் நேற்று கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அடுத்த சாமி விளையை சேர்ந்த புஷ்பராணி என்பவர் நேற்று மாலை அழகியமண்டபத்தில் இருந்து களியக்காவிளை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அப்போது , பஸ்ஸில் ஒரு தங்க கொலுசு கிடந்ததை பார்த்து எடுத்துள்ளார்.
உடனடியாக, களியக்காவிளை காவல் நிலையத்துக்கு சென்ற புஷ்பராணி அந்த கொலுசை ஒப்படைத்தார். கொலுசுக்கு உரியவர் மற்றொரு கால் கொலுசை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என போலீசார் அறிவித்தனர். இதையடுத்து, நெய்யூர் ஊற்றுக்குழியை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு சென்று கொலுசு தன்னுடையது என கூறி ஜோடி கொலுசுவை காட்டினார். ஜோடி கொலுசுவை பார்த்து உறுதி செய்த போலீஸார் கஸ்தூரியிடத்தில் புஷ்பராணியையே வரவழைத்து கொலுசுவை ஒப்படைத்தனர்.
Comments