அரசு பள்ளியில் காதல் பாடம் வாத்தி கொலை..! அறிவியலை நோக்கிய கணக்கிற்கு தீர்வு...!

0 14267
அரசு பள்ளியில் காதல் பாடம் வாத்தி கொலை..! அறிவியலை நோக்கிய கணக்கிற்கு தீர்வு...!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அருகே அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியைக்கு, காதல் பாடம் நடத்திய கணக்கு வாத்தியார் கூலிப்படையால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 பெண்கள் ஒரு மாணவி என்று காதல் அட்டகாசம் செய்த மன்மத ஆசிரியருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சடலமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரை அடுத்த கங்காவரம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் என்பதும் ஊத்தங்கரை ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த அவரை மர்ம கும்பல் கடத்திச் சென்று கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

சிவக்குமாருடன் பணிபுரிந்த ஆசிரியையின் கணவரை பிடித்து விசாரித்த போது கொலை தொடர்பான மர்மம் விலகியது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக பணிபுரிந்து வந்த சிவக்குமாருக்கு அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் லட்சுமி என்பவருடன் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றது. கணக்கு பாடத்தை மறந்து சிவக்குமார் நடத்திய காதல் பாடத்தில் மயங்கிய லட்சுமி பல இடங்களில் அவருடன் உல்லாசமாக சுற்றித்திரிந்து உள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் காதல் கணவர் இளங்கோ, சிவக்குமாரை சந்தித்து நாங்கள் ஏற்கனவே காதல் செய்து சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளோம் எங்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் அறிவியல் டீச்சர் உடனான ஈர்ப்பை கணக்கு வாத்தியார் கைவிடாமல் தனது காதல் ஆராய்சியை தொடர்ந்துள்ளார்..!

இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, கூலிப்படை கும்பலை வைத்து, கணக்கு வாத்தியாரின் கைகால்களை உடைத்து ஒரே இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார். ஊத்தங்கரை இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடி வெள்ளைச்சாமியை சந்தித்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கணக்கு வாத்தியாரின் கை கால்களை உடைக்க கூறியுள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற சிவக்குமாரை, வாடகைக்கு எடுத்து வரப்பட்ட ஸ்கார்பியோ காரில் பின் தொடர்ந்த கூலிப்படையினர்,ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிவகுமாரை வழிமறித்து காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றுள்ளனர். உடன்வந்த லாரியில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.

காருக்குள் வைத்தே சிவகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயங்கி நிலையில் இருந்த சிவக்குமாரை வீசுவதற்கு இடம்பார்த்து கிருஷ்ணகிரி வரை சென்று மீண்டும் நாட்றம்பள்ளி நோக்கி திரும்பியுள்ளனர். பங்களாமேடு பகுதியில் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாததை கண்டு அந்தப் பகுதிக்கு சிவக்குமாரை தூக்கிச்சென்று சரமாரியாக தாக்கி கை காலை உடைத்து கயிற்றால் கட்டி வீசியுள்ளனர்.

அப்போது கணக்கு வாத்தியார் முனங்கியபடியே சத்தமிட்டுள்ளார். சுயநினைவு இருப்பதால் தங்களை காட்டிக்கொடுத்து விட வாய்ப்புள்ளது என்று உஷாரான கூலிப்படையினர் ஸ்கார்பியோ காரை வைத்தும், கேண்டர் லாரியை வைத்தும் சிவகுமார் தலையில் ஏற்றி நசுக்கியுள்ளனர். சிவகுமாரின் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் சாணம் பூசி மறைத்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று வீசியதாகவும் கூலிப்படை கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், ஆசிரியை லட்சுமியின் கணவர் இளங்கோ, ரவுடி வெள்ளைச்சாமி உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக ஆசிரியர் சிவக்குமார் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது அவர் ஆசிரியை லட்சுமி மட்டுமல்லாமல் மேலும் 5 பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் கர்ப்பத்தை கலைக்க கணிசமான தொகையை கொடுத்து தனது செல்வாக்கால் தப்பியதும் தெரியவந்ததால், இவர்களில் சிவக்குமாரை கொன்றது யார் ? என்பதை கண்டுபிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்துள்ளது.

இவர்களில் ஆசிரியை லட்சுமியின் கணவர் இளங்கோ ரவுடி வெள்ளச்சாமியுடன் பேசிய சொல்போன் தொடர்புகள் மூலம் கொலை சம்பவம் துப்பு துலங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கை நிறைய கவர்மெண்டு சம்பளம், சலித்துக் கொள்ளும் அளவிற்கு விடுமுறை, தட்டிக்கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு ஓடினால், மன்மத ஆசிரியரின் வாழ்க்கையில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது சிவக்குமாரின் கொலை சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments