ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை..!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைக்க உள்ளார். ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையைப் பேரவைத்தலைவர் தனபால் தமிழில் வாசிப்பார். அதைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
அதன் பின், அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.
கூட்டத் தொடரின்போது, ஒவ்வொரு நாளும் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்று, இறுதியாக விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார்.
பேரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பேரவைக் கூட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
பேரவைக்கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடிய விடிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் ரோந்துப் பணியும் தீவிரமாக நடைபெற்றது.
Comments