திருமணத்திற்கு தந்தை இல்லையே என ஏங்கிய கடைக்குட்டி மகள்... இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சகோதரிகள்!

0 73554

உயிரிழந்த தந்தையின் சிலை முன்பு தங்கையின் திருமணத்தை நடத்தி அவரது கனவை நினைவாக்கிய சகோதரிகளின் செயல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தொழிலதிபர் செல்வம். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தான் உயிருடன் இருக்கும்போது தனது முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார் செல்வம். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.

செல்வம் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் கடந்தும் அவர் இல்லாதது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. சமீபத்தில் செல்வத்தின் செல்ல மகளான கடைக்குட்டி லட்சுமி பிரபாவுக்கும், கிஷோர் என்ற மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் லட்சுமி பிரபா, மறைந்த அப்பா தனது திருமணத்தில் இல்லாததை நினைத்து தொடர்ந்து வருந்தி வந்தார்.

இதனையறிந்த லண்டனில் மருத்துவராக பணிபுரியும் மூத்த சகோதரி புவனேஷ்வரி, தங்கையின் வருத்ததை போக்கும் வகையில் தனது கணவர் உதவியுடன் சுமார் 6 இலட்சம் செலவில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிலிக்கான் மற்றும் ரப்பரைக் கொண்டு தனது தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்தார்.

இந்த நிலையில் சகோதரி லட்சுமி பிரபாவின் திருமணம் இன்று பட்டுக்கோட்டையில் நடந்தது. அப்போது தந்தையின் முழு உருவ சிலையை மூத்த சகோதரி புவனேஸ்வரி மண்டப மேடைக்கு கொண்டு வந்து தன் பாச தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத லட்சுமி பிரபா தன் தந்தையின் சிலையை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்து அழுதார். அதோடு தந்தையின் சிலை அருகே தாய் கலாவதியை நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதமும் பெற்றனர். இந்த உணர்வுப்பூர்வமான காட்சியை மண்டபத்தில் நேரிடையாக கண்ட உறவினர்கள் அனைவரும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியில் நிறைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments