கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த கூலி வேலைக்கு செல்லும் மாணவி.. குவிந்து வரும் உதவிகள்!

0 2216

கல்லூரி கல்வி கட்டணத்தை கட்டுவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் தினக்கூலியாக வேலைப்பார்த்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த மாணவிக்கு தற்போது பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.

ஒடிசாவின் பூரி மாவட்டத்தினை சேர்ந்த 20 வயது மாணவி ரோஸி பெஹெரா. கடந்த 2019ம் ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிவில் இன்ஜினியரியங்கில் இளங்கலை பட்டயப்படிப்பு படிக்க ஆசைப்பட்டார். ரோஸி பட்டியிலனத்தை சேர்ந்த பெண் என்பதால் அரசாங்க உதவித் தொகை மூலம் கல்லூரியில் அவர் படிக்க முடியும். ஆனால் விடுதி மற்றும் கல்லூரி பேருந்து கட்டணத்தை கட்ட முடியாததால் கல்லூரிக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதோடு ரோஸி பெஹெரா டிப்ளோமோ படித்த பள்ளிக்கு ரூ.24,500 நிலுவைத் தொகை செலுத்தாததால் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்ததற்கான சான்றிதழை பள்ளி நிர்வாகம் அவருக்கு கொடுக்க மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த ரோஸி பெஹாரா தனது குடும்ப பொருளாதார சூழ்நிலை தனது படிப்பிற்கு முட்டுகட்டை போட்டுவிட கூடாது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டார். அதன்படி தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் தினக்கூலியாக ஒரு நாளைக்கு ரூ.207 என்ற சம்பளத்தில் வேலைப் பார்த்து வந்தார் ரோஸி பெஹெரா.

அவருடன் அவரது இரு தங்கைகளும் 100 நாள் வேலை திட்டத்தில் தின கூலி சம்பளத்திற்கு வேலைப்பார்த்து வந்தனர். இவர்கள் 3 பேரும் கடந்த மூன்று வாரங்களாக குளம் வெட்டுவது, சாலை அமைப்பதற்காக தலையில் மண் சுமப்பது என கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக என்று உழைத்து வந்தனர்.

இது குறித்து ரோஸி பெஹெரா கூறுகையில், "கல்லூரி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.விடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தாலும், கல்லூரி நிர்வாகம் எனது டிப்ளோமா சான்றிதழைக் கொடுக்க மறுத்துவிட்டது. மேலும் சிவில் இன்ஜினியரிங் படிப்பை கல்லூரியில் தொடர்வதற்கு எனது விடுதி நிலுவைத் தொகை மற்றும் பஸ் கட்டணங்களை நான்கு பெண் பிள்ளைகளை கொண்ட எனது ஏழ்மையான குடும்பத்தால் முடியவில்லை. நான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் என்பதால், எனது முழு கல்லூரிக் கட்டணத்தையும் அரசாங்கம் செலுத்தியது. ஆனால் அதில் விடுதி மற்றும் பஸ் கட்டணம் அதில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த செலவுகளை சமாளிப்பதற்காக மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தில் தினக்கூலியாக வேலைப்பார்த்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

கல்லூரி மாணவி ஒருவர் கட்டணத்தை செலுத்துவதற்காக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வேலைப்பார்த்து வருகிறார் என்ற செய்தி தெரியவரவே, தற்போது அவர் இருக்கும் தொகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவி ரோஸி பெஹெராவுக்கு உதவ தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் ஒடிசாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ராணி பாண்டா, “கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவி ரோஸி பெஹெரா கூலி வேலை செய்து வரும் செய்தியை அறிந்து அவரது வங்கி கணக்கிற்கு ரூ.25,000 அனுப்பியுள்ளேன். அவர் மேற்படிப்பை தொடரவும் உதவி செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments