2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை..! - முழு விவரம்

0 2498
2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை..! - முழு விவரம்

புதிய வரிவிதிப்புகள் ஏதுமில்லாத, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்ச ஆதார விலை, வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்வது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முடிவுகட்டப்பட்டு, முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் வகையில், ஆத்மநிர்பார் ஸ்வஸ்தியா பாரத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்த நிதியமைச்சர், அதற்காக 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றார்.

நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும். காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய், கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர், வரும் நிதியாண்டில் விவசாய கடனாக 16.5 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கி, மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன. எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்கள் வாங்கும் வகையில் வெளியிடப்பட உள்ளன.

அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் 1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மலிவு விலை வீட்டு வசதித் திட்டங்கள் மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில், பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி புதிதாக விதிக்கப்படுகிறது. பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிக்கப்படுகிறது.

12.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. வெள்ளியின் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments