கொரோனா மனஅழுத்தத்தில் இருந்து விடுபட, சார்லி சாப்லின் வேடம்... பாகிஸ்தானை கலக்கும் உஸ்மான் கான்!

0 1583
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள்...அப்படி தனது எதார்த்தம் மற்றும் கோமாளித்தமான நடிப்புகளால் பலரை வாய்விட்டு சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பாகிஸ்தானில் மீண்டும் வலம் வந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள்...அப்படி தனது எதார்த்தம் மற்றும் கோமாளித்தமான நடிப்புகளால் பலரை வாய்விட்டு சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பாகிஸ்தானில் மீண்டும் வலம் வந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

வறுமையில் பிறந்து தாய், தந்தை ஆதரவு இழந்து 5 வயதிலேயே அநாதையான ஒரு சிறுவன், தாய் ஏறிய நாடக மேடையில் தனது பாதத்தை பதித்து நாளடைவில் உலகமே புகழும் உச்சிக்கு சென்றான் என்றால் அது சார்லி சாப்ளினால் மட்டுமே முடியும்.

வறுமையில் அரவணைக்க ஆதரவின்று பல நாட்கள் கண்ணீர் வடித்த சார்லி சாப்ளினின் எதார்த்தமான அமைதியான நகைச்சுவை நடிப்பு பலரது கவலைகளை மறக்கச் செய்தது.

அவரது நடிப்பு பலருக்கு மருந்தாக அமைந்தது. அப்படி நகைச்சுவை நடிப்பால் இவ்வுலகை சிரிக்க வைத்த கலைஞன் மறைந்தாலும், அவனது புகழ் என்றும் இறவா வரம் பெற்றது.

அதனை மெய்பிக்கும் வகையில் அந்த கலைஞனை அதே யதார்த்த நடிப்பு மூலம் மீண்டும் மக்கள் கண் முன் கொண்டு வந்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த பொம்மை விற்கும் தொழிலாளி ஒருவர்.

பாகிஸ்தானின் பெஷாவார் நகர சாலையில் பரபரப்பான இயங்கிக் கொண்டிருக்கும் ஆட்டோ, கார், பைக்குகளுக்கு இடையே கருப்பு நிற கோட், தொப்பி மற்றும் கையில் ஒரு கோலுடன் காட்சியளிப்பவர் தான் 28 வயதான உஸ்மான் கான்.

சாலையோரம் குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகளை விற்பனை செய்யும் தொழிலாளியான உஸ்மான் கான், கொரோனா ஊரடங்கில் சார்லி சாப்ளினாக மாறியுள்ளார்.

அமைதியான முறையில் உஸ்மான் கான் செய்யும் நகைச்சுவையை பார்க்க அவரது பின்னால் எப்பொழுதும் குழந்தைகள் சுற்றி வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ஊரடக்கால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில் அதில் ஒருவராக பாதிக்கப்பட்டவர் தான் இந்த உஸ்மான் கான்.

நோய் தொற்றால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட சார்லி சாப்ளினின் நகைச்சுவை வீடியோக்களை பார்த்துள்ளார். அது அவரது மனதில் ஆழ பதியவே பிறரின் சிரிப்புக்காக தன்னை கோமாளியாக மாற்றிக் கொண்ட சார்லி சாப்ளினால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார்.

தானும் அதுபோல் நகைச்சுவையை வெளிப்படுத்தி மற்றவர்களின் முகத்தில் சிரிப்பை உணர வேண்டும் என்று கருதிய உஸ்மான் கான், சார்லி சாப்ளினை போன்று உடை, பொருந்தாத கால் ஷூ, கையில் ஒரு கோல், தொப்பி, சார்லியை அடையாளம் காட்டும் அரை இன்ச் மீசை என முழுவதுமாக மாறியுள்ளார்.

அவ்வபோது சாலைகளிலும், கடைகளுக்கும் சென்று குறும்புத்தனமான நகைச்சுவையை வெளிப்படுத்தும் உஸ்மான் கானை முதன் முதலில் பார்ப்பவர்களின் கண்களுக்கு சார்லி சாப்ளின் மீண்டும் வந்ததாகவே தெரியும்.

சார்லியை போன்று நகைச்சுவை நடிப்பால் பிரபமடைந்த உஸ்மான் கானை இரண்டே மாதங்களில் டிக்டாக்கில் 8 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.

சார்லி சாப்ளினை போன்று வறுமையான வாழ்வை ஆரம்பமாக கொண்ட உஸ்மான் கான் தனது நகைச்சுவை நடிப்பு மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறார்.

இவருடன் பலர் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். தனது நடிப்பிற்கான எந்தவித பலனையும் எதிர் பாராத உஸ்மான் கான், அமைதியான நகைச்சுவை மூலம் மக்களின் இதயங்களை வெல்வது கடினமான பணி என்கிறார்.

தனது நடிப்பு திறன் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றார் நவீன கால சார்லி சாப்ளின்.

உலகில் கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை அதில் சாப்ளின் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments