மத்திய பட்ஜெட்: தமிழக நெடுஞ்சாலைகள் - ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு..!

0 2057

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட விரிவாக்க திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு" என்று பொருள்படும் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

இதேபோல, இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றது. இதில் முதன்மையாக, தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை பணிக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.

மும்பை-கன்னியாகுமரி இடையேயும் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலைகள் அமைக்கப்படும்.

இதேபோல, சென்னை மெட்ரோ ரயிலின் 118.9 கிமீ தொலைவுக்கான 2ஆம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments