மியான்மரில் திரும்பிய வரலாறு: ஆங் சான் சூகி கைது..!
மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகி யை, அந்நாட்டு ராணுவம் மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அதிகாரத்தை ஓராண்டுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராணுவ ஆட்சி நீடித்து வந்த மியான்மரில் ஜனநாயகம் மலரப் போராடிய தலைவர் ஆங் சான் சூகி. மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக இருக்கும் இவர், அறவழிப் போராட்டத்தைக் கையிலெடுத்தார். இதற்காக 1990 முதல் 2005ம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் கழிக்க நேர்ந்தது. அவரை விடுவிக்க வேண்டும் என மியான்மரில் நாள்தோறும் போராட்டங்கள் நடந்து வந்தன.
ஒருவழியாக சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ராணுவம், ஆங் சான் சூகியை விடுவித்தது. வீட்டுக் காவலில் இருந்த காலகட்டத்தில் நோபல் பரிசு, மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது, நேரு விருது, மகசேசே விருது, கனடாவின் கவுரவக் குடிமகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார் ஆங் சான் சூகி. 2015ல் நடந்த பொதுத் தேர்தலில் இவரது தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி 80 விழுக்காடு இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப்பிரச்னை தலைதூக்கியது. ஜனநாயகத்திற்காக போராடிய சூகி, தன்னைக் கைது செய்த ராணுவத்தை ஏவி இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் முன் விசாரணைக்கும் ஆஜரானார் சூகி. இவரது செயலால் அதிருப்தியடைந்த கனடா அரசு, சூகிக்கு வழங்கிய கவுரவக் குடிமகள் விருதைத் திரும்பப் பெற்றது. மலேசிய அரசும் தங்கள் நாட்டின் நிரந்தரக் குடிமகள் என்ற அந்தஸ்தை சூகி இழந்து விட்டதாக அறிவித்தது. சூகிக்கு நோபல் பரிசு, மகசேசே விருதையும் திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் முடிவுகள் வெளியாகும் முன்பே பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதாக ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்து ஆட்சியில் அமர்ந்தது. இந்த விஷயம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த நேரத்தில் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஆங் சான் சூகியை மீண்டும் கைது செய்துள்ளது அந்நாட்டு ராணுவம். இதன் மூலம் கடந்து சென்ற வரலாறு மீண்டும் திரும்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments