எளிமையின் சிகரம் : நேர்மையின் இலக்கணம் ; தன் சொத்துக்களை அப்படியே தானம் செய்த ஓமந்தூரார்!

0 8856
மந்தூரார் ராமசாமி ரெட்டியார்,  தன்னைத் தேடிவந்த முதல்வர் பதவியை  வேண்டாம் என்று மறுத்துவிட்டார். காமராஜர் மற்றும் ராஜாஜியின்  வற்புறுத்தலால் மூன்று மாத காலத்திற்குப் பின் சென்னை மாகாணத்தின் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
 
எட்டாம் வகுப்புவரை படித்த ஓமந்தூரார், காந்திய சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, சிறு வயதிலேயே விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 
 
நாடு முழுவதும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை மகாத்மா அறிவித்தபோது, வேதாரண்யத்தில் நடைபெற்ற அப்போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதற்காக சிறைத்தண்டனையும் அனுபவித்தார். 1942ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற  'வெள்ளையனே வெளியேறு' இயக்க போராட்டத்திலும் தன்னை இணைத்துக்கொண்ட அவர், அதற்காக ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்டு, 15மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். அந்தளவிற்கு சுதந்திர தாகம் அவரது அடி மனதில் கொளுந்துவிட்டு எரிந்தது.
 
image
 
"அறவழி என்பது ஆலம் விழுதுகள்போல்  மிகவும் பலமானது" அதன் மூலமே இந்திய விடுதலையை பெறமுடியும் என்ற ஓமந்தூரார் காந்தியவாதியாகவே வாழ்ந்துகாட்டினார்
 
உயர் சாதியினரின் ஆதிக்கம் காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயத்துக்குள் சென்று இறைவனை வழிபட முடியாத சூழல் அதிகமாகவே இருந்துவந்த அந்த காலகட்டத்தில், புண்ணிய தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்துக்குள் அரிசன மக்களை தன்னோடு அழைத்துச்சென்று ஆலய பிரவேசம் செய்தார் ஓமந்தூரார்.  
 
நாடெங்கும் சமத்துவம் நிலவவேண்டும். உயர்ந்தவன்  - தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை களைய வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக செயல்பட்டார். இதனால் உயர் சாதி நண்பர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிட்ட போதிலும், அதைப் பற்றி துளியளவுக்கூட அவர் கவலைப்படவில்லை.
 
முதல்வர் ஆவதற்கு 10ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.
அத்தேர்தலில் அதீத செல்வாக்கு பெற்ற தீரர் சத்தியமூர்த்தியை எதிர்த்து போட்டியிட்டு,  அவரை படுதோல்வி அடையசெய்து, அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார் ஓமந்தூரார்.
 
காங்கிரஸ் கட்சியிலும் அவரது செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது. காலம் வேகமாக உருண்டு ஓடின. இந்நிலையில், சென்னை மாகாணத்தின் முதல்வர் பதவி அவரைத் தேடிவந்தது. ஆனால் அவரோ, 'அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது' என்றார். இருப்பினும்,  திருவண்ணாமலை யிலுள்ள ரமண மகரிஷியை சந்தித்து, "முதல்வர் பதவியை கட்சியினர் ஏற்க சொல்லுகிறார்கள். என்ன செய்யலாம்" என்று கேட்டார். அதற்கு அவரோ, "நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்" என்றார்.
 
அதன் பின்பே, 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கீழுள்ள சென்னை மாகாணத்தின் முதல்வர் பதவியை ஓமந்தூரார் ஏற்றார்.அவர் பதவியேற்றதும்  தனக்கான அந்தரங்க செயலரை நியமிப்பதில்,  ஐசிஎஸ் படித்த ஆங்கில அதிகாரிகளை தவிர்த்துவிட்டு, ஏ. அழகிரிசாமி என்ற தமிழரை நியமித்தார். வழக்கறிஞரான அழகிரிசாமி பின்னாளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜொலித்தார்.
 
அடுத்து, பாராட்டு கூட்டங்களுக்கும்  வெற்று விழாக்களுக்கும் அரசியல் ஆரவாரங்களுக்கும் தடை போட்டார்.
எளிமையின் சிகரமாகவும் நேர்மையின் இலக்கணமாகவும் திகழ்ந்தார். சென்னை மாகாணம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய தேசத்தோடு இணைக்க முக்கிய பங்காற்றினார். 
image
 
 
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாட்டை உடைத்தெறிய அரும்பாடுபட்டார். விவசாயிகள் மற்றும் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தினார்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்தார். 
 
அந்நாளில், சென்னை மாகாணத்தில் இருந்த ஏழுமலையான் கோயிலில் ஆதி திராவிடர்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கும் பொருட்டு, ஆலயப் பிரவேச சட்டத்தை இயற்றினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயத்துக்குள் செல்வதற்கு வழிவகை செய்தார். 
 
அது மட்டுமின்றி, பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட திண்டிவனம் சட்டமன்ற  தொகுதியின் உறுப்பினரான குலசேகர் தாஸ் என்பவரை அவ்வாலயத்தின் அறங்காவலராக நியமித்தார்.  இதற்கு ஆதிக்க சாதியினரிடமிருந்து  பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அதற்கெல்லாம் ஓமந்தூரார் அசைந்து கொடுக்கவில்லை.
 
ஆதி திராவிடர்களுக்கு என்று தனித்துறையை உருவாக்கினார். அதற்கு என்று ஓர் ஆணையரை நியமித்தார். அரசாங்க நிலத்தை பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாக பிறப்பித்தார். அதன்மூலம் ஆதிதிராவிடர் நலத்துறையின் தந்தை என போற்றப்பட்டார். இரண்டாண்டு காலம் முதல்வராக இருந்த காலத்தில் கட்சிகாரர்களுக்கோ நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ அவர் எவ்வித சலுகையும் செய்து கொடுக்கவில்லை. தமிழக இலச்சினை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
 
அவர் பெயரிலுள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில்தான்  ராஜாஜி ஹால், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, பன்நோக்கு அரசு மருத்துவமனை ஆகியன உள்ளன. 1947ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 1949 ஏப்ரல் 6 வரை முதல்வர் பதவியில் இருந்தார். இதற்கிடையில் நாடு விடுதலைப் பெற்றது. அதன் மூலம் விடுதலை இந்தியாவின் முதல் தமிழக முதல்வர் என்ற சிறப்பு ஓமந்தூராருக்கு கிட்டியது.
 
image
 
அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் பகுதியில் உள்ள ஓமந்தூரில் 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி ராமசாமி ரெட்டியார் பிறந்தார். ஓமந்தூரில் பிறந்ததால்  ஓமந்தூரார் என்று அனைவராலும்  அன்போடு அழைக்கப்பட்டார். 
 
உண்மை - உழைப்பு - நேர்மை இந்த மூன்றும் அவரது தாரக மந்திரமாகும். தன் வாழ்நாள் முழுவதும் அவற்றை தவறாமல் கடைபிடித்தார். அதன்படியே அவர் வாழ்ந்தும் காட்டினார். தன் பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தையும் வடலூர் சன்மார்க்க சங்க மடத்துக்கு எழுதி வைத்துவிட்டார்.
 
உடல்நலம் குன்றியிருந்த காலத்தில், அவரது உடல்நலனை கவனிக்கும் பொருட்டு, அரசு மருத்துவமனையில்  சிகிச்சைப்  பெறுமாறு ஓமந்தூராரிடம்  முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமாட்டேன் என அவர் மறுத்துவிட்டார்.
 
மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட வீணடிக்க விரும்பாத ஒழுக்கச்சீலரான ஓமந்ததூரருக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்த இம்மண்ணில் நாமும் பிறந்தோம் என எண்ணி மகிழ்வோம்.
 
 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments