கொரோனாவிலிருந்து "விடுதலை" டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா.!

கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலா புறப்பட்டுச் சென்ற கார் மீது மலர்தூவி அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை ஆனார். கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள், நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.
இந்தநிலையில், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வார காலத்திற்கு தனிமைப் படுத்திக்கொள்ள மருத்துவர்கள் சசிகலாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துவரப்பட்டார் சசிகலா, அங்கு குழுமியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். சசிகலா புறபட்டுச் சென்ற கார் மீது மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சசிகலா புறப்பட்டுச் சென்ற காரில் அதிமுக கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்தது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூரு புறநகர் பகுதி தேவனஹள்ளியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கி ஒரு வார காலத்திற்கு ஓய்வெடுக்கும் சசிகலா, பிப்ரவரி 7ஆம் தேதிக்குப் பிறகே சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவின் காரில் அதிமுகவின் கொடி கட்டப்பட்டிருந்ததாக கூறினார்.
Comments