கூண்டிலிருந்து விடுபட்ட சிறுத்தை... வியக்க வைத்த புகைப்படம்!

0 4738

கோவை மதுக்கரை அருகே  ஆடு, கோழிகளைக் கொன்று வந்த சிறுத்தையை  வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில்,  சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வீட்டின் அருகில் இருக்கும் நாய்கள், ஆடுகள், கன்றுக்குட்டி ஆகியவற்றை வேட்டையாடி வந்தது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட  ஆடுகளும், நாய்களும் சிறுத்தையால் வேட்டையாடப்பட்டது.

கடந்த 21 ம் தேதி நள்ளிரவில் குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை,  ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமர்ந்திருந்தது. அப்போது சீனிவாசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து குரைக்கவே, சிறுத்தை அங்கிருந்து தப்பி சென்றது. இதன் பின்னர் மட்டப்பரை என்ற பகுதியில் உள்ள ஞானபிரகாஷ் என்பரின் ஆட்டுப்பட்டிக்குள் சிறுத்தை நுழைந்தது. அங்கு நான்கு ஆடுகள் சிறுத்தை கடித்ததால் உயிரிழந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து காந்திநகர் மற்றும் மட்டப்பரை ஆகிய இடங்களில் மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் காந்தி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. வனக் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தெங்குமரஹடா வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிறுத்தை அங்கு விடுவிக்கப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments