டெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து போலீஸ் சிறப்பு பிரிவினர் விசாரணை தீவிரம்

0 1139
டெல்லி இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து போலீஸ் சிறப்பு பிரிவினர் விசாரணை தீவிரம்

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சம்பவத்திற்கு முன்னதாக வாடகைக் காரில் வந்து 2 பேர் இறங்கிய சிசிடிவி காட்சி மூலம் துப்பு துலங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லியில் உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சக்திகுறைந்த குண்டு நேற்று மாலை 5 மணி 5 நிமிடங்களுக்கு வெடித்துச் சிதறியது.

இதில் உயிர்சேதமோ, காயமோ, உடைமைகளுக்கு பாதிப்போ ஏற்படவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்தது.

அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு வாடகைக் காரில் 2 பேர் வந்திறங்கிய காட்சிகள், போலீசாரின் சந்தேக வளையத்திற்குள் வந்துள்ளன.

அந்த வாடகைக் காரை ஓட்டி வந்தது யார், காரில் இருந்து இறங்கிய 2 பேர் யார் என விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்காக சந்தேக நபர்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில், இஸ்ரேல் தூதரக்தை எச்சரிக்கும் விதமாக வீசிச்செல்லப்பட்ட குறிப்பு ஒன்று கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அந்த குறிப்பில் இடம்பெற்றிருந்த விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், 2 கிலோமீட்டர் தள்ளி டெல்லி விஜய் சவுக்கில் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

எனவே வெடிகுண்டு தாக்குதல் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தலைநகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, குண்டுவெடிப்பு குறித்து இந்தியா முழுவிசாரணை நடத்தும் என்பதிலும், இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதிலும் தமக்கு முழுநம்பிக்கை இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

இதேபோல, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர், வெளியுறவுச் செயலர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை, இந்திய தரப்பில் அதே நிலைகளில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசியதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்க்கா (Ron Malka) தெரிவித்துள்ளார்.

இந்தியா-இஸ்ரேல் இடையே முழுமையான தூதரக உறவுகள் நிலைநாட்டப்பட்டதன் 29ஆம் ஆண்டு விழா கடைப்பிடிக்கப்பட்ட நேற்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்செயலானதாகத் தெரியவில்லை என்றும், எனவே இது இஸ்ரேல் தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அனுமானிப்பதாகவும் ரோன் மல்க்கா கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments