உலகிற்கே தற்போது இந்தியா முன் உதாரணமாக உள்ளது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற செயல்கள் துரதிருஷ்டவசமானவை என குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகளையோ வசதிகளையோ பறிக்கவில்லை என்றும், புதிய உரிமைகளையும் வசதிகளையும் பெற்றுத் தருவதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நாடாளுமன்றம் வந்த குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
பல நாடுகளுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதாகவும், உலகமே இதைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார். குறைந்த பட்ச ஆதார விலையில் அரசு கொள்முதலில் சாதனை அளவு எட்டப்பட்டிருப்பதாகவும், மேலும் பல அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
7 மாதங்களுக்கு முன்னர் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் 10 கோடி விவசாயிகள் பயன்பெறுவதாகவும், தற்போது அச்சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதை மதிப்பதாகவும் குடியரசுத் தலைவர் விளக்கம் அளித்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான கருத்துகளை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கே மத்திய அரசு முன்னுரிமை கொடுப்பதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில், பிரதமர் உழவர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், 1 லட்சத்து 13ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டதோடு, நாடு முழுவதும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார்.
Comments