தனி நபர் தரவுகளை பாதுகாக்க வலிமையான புதிய சட்டம் -பிரதமர் நரேந்திர மோடி

தனி நபர் தரவுகளை பாதுகாக்க வலிமையான புதிய சட்டத்தை அரசு கொண்டு வர உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொருளாதார மையத்தின் சார்பிலான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், வெறும் 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.
அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுமென அவர் குறிப்பிட்டார்.
இரு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் மேலும் சில மருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருமென அவர் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு இடையிலும் 150 நாடுகளுக்கு இந்திய அரசு மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
பல நாடுகளில் மக்களின் உயிரை காக்க இந்தியா தடுப்பூசிகளை வழங்கி வருவதாக அவர் கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் மூலம், சர்வதேச தொழில் வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்யுமென்று அவர் தெரிவித்தார்.
ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா பொருளாதார மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவதாக கூறிய அவர், பெருநிறுவன வரி 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
தொழிலாளர் நலச்சட்டங்கள் சீர்திருத்தப்பட்டுள்ளதாகவும், வரி விதிப்பு முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அடுத்த 20 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு துறையில் 4.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் தேவை அதிகரிக்கும் என்றார்.
இதனை உணர்ந்துள்ளதால், அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். தொழில் துறைக்கு தேவையான நிலையான நல்ல சூழலை தர அரசு தொடர்ந்து பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு, இணைய தொழிலுக்கான கருவிகள் உற்பத்தி உள்ளிட்டவற்றில் முதலீடுகள் அதிகரிக்க அரசு ஊக்கமளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதே போல தரவுகளை பாதுகாக்க வலிமையான சட்டத்தை கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக மோடி தெரிவித்தார்.
Comments