போராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்

0 4825
டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் இருந்து இரண்டு விவசாயச் சங்கங்கள் வெளியேறியுள்ளன.

டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் இருந்து இரண்டு விவசாயச் சங்கங்கள் வெளியேறியுள்ளன.

மேலும் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் பேரணியையும் விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளால், காவல்துறையினர் 394 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வன்முறை தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 50 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும் டிராக்டர் பேரணியின் போது சிலர் டெல்லி செங்கோட்டையில் நிஷான் சாஹிப் எனப்படும் சீக்கிய மதக் கொடியை ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சிங் அறிவித்தார்.

போராட்டத்தை திசை திருப்ப சிலர் முயற்சிக்கும் நிலையில், இனியும் அதனை தொடர முடியாது என்று தெரிவித்தார்.

இதேபோல் குடியரசு நாளில் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், எனவே 58 நாள் போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்வதாகவும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் தாகூர் பானு பிரதாப் சிங்கும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த செய்தியாளர் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது பேசிய விவசாயத் தலைவர் பால்பீர் எஸ் ராஜேவால், பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணி டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக தற்போதைக்கு ஒத்திவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments