”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்..!

0 3152
”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம்:

தைப்பூசத் திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் மொட்டை அடித்தும், தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இந்த ஆண்டு தைப்பூச விழாவானது கோவில் உள் பிரகாரத்திற்குள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சுவாமிநாதசுவாமி தங்க கவசம், வைர வேலுடன் அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர், தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக பெருந்திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்தது.

வடபழநி:

சென்னை வடபழநி முருகன் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பால்குடம் எடுத்தும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் வழிபடுவது வழக்கம். கோவில் பராமரிப்பு பணி காரணமாக இவை தடைசெய்யபட்டுள்ளன

பழனி:

பழனியில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று மாலை நடைபெறும் தேரோட்டத்தில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துவருகின்றனர். மலை அடிவாரத்தில் பக்தர்கள் பால்காவடி, மலர்காவடி, மயில்காவடி ஆகியவற்றை சுமந்தபடி ஆடியும், அரோகரா கோசம் எழுப்பியபடியும் கிரிவலம்வந்த வண்ணம் உள்ளனர். 

அதிகாலை முதல் பக்தர்கள் சூரியதரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதை தவிர்க்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது பக்தர்கள் இணையவழியில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழா, வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவிலில், அம்பாள் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் கோவிலில் 150-வது தைப்பூச திருவிழாவையொட்டி ஜோதி தரிசனம் நடைபெற்றது. காலை 6.00 மணிக்கு ஏழு திரைகளை நீக்கி முதலாவது ஜோதி தரிசனமும், 10 மணிக்கு இரண்டாவது ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சிணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மலை மேல் அமைந்துள்ள சுப்பரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி, காவடிகளை எடுத்துக் கொண்டு மலைக் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி சந்திரசேகரர், அம்பாள் மணோன்மணி அம்பிகை எழுந்தருளிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதி வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.

வேலூர் :

குடியாத்தம் அருகே மயிலாடும்மலையில் உள்ள பழமையான முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 300 க்கும்  மேற்பட்ட பெண்கள் மேளதாளங்களுடன் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் கோயிலில் உள்ள ஒன்பதே முக்கால் அடி உயரம் உள்ள மூலவர் சக்தி வேல் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் :

குன்றத்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

ஈரோடு :

கந்தசஷ்டிக் கவசம் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப்படும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள கைலாசநாதர் கோவிலில் வள்ளி தெய்வாணை சமதே முத்துக்குமாரசாமிக்கு பல்வேறு திரவியப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு  மகா தீபாராதனை மேற்கொள்ளப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments