தொலைந்துபோன பாஸ்போர்ட்டால் நரகத்தில் சிக்கிய இளம்பெண்... 18 வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்பிய சோகம்!

0 19432

18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் ஒருவர், தனது பாஸ்பார்ட்டை தவறுதலாகத் தொலைத்துவிட்டதால், இத்தனை வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 18 வருடங்களாக சிறையில் வாடிய அந்தப் பெண் இப்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனா. உத்தரப் பிரதேசம் சஹாரன்புர் பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் அகமது என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஹசீனா மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் ஒருவரைக் காண ஹசீனா பாகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் லாகூரில் இருந்த போது தனது பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டார். இதனால், பாகிஸ்தான் போலீசார் அவரை சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் கூறி சிறையில் அடைத்தனர். அவர் தன் பாஸ்போர்ட் காணமல் போய்விட்டதைக் கூறியும் பாகிஸ்தான் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.

அவுரங்காபாத்திலுள்ள ஹசீனாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் ஹசீனா பாகிஸ்தானில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து புகார் அளித்தனர். அதன் பிறகு தூதரக அதிகாரிகள், ஹசீனா இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறி அதற்கான ஆதாரங்களை அளித்தனர். ஆதாரங்களைப் பெற்ற பிறகு பாகிஸ்தான் ஹசீனாவை விடுவிக்க ஒப்புக்கொண்டு விடுவித்துள்ளனர்.

சுமார், 18 ஆண்டுகளாகப் பாகிஸ்தான் சிறையில் வாடிய ஹசீனா நாடு திரும்பியுள்ளார். அவரை உறவினர்களும் அவுரங்காபாத் போலீசாரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். நீண்ட நாட்கள் கழித்து விடுதலை ஆகியிருப்பது குறித்து, “பாகிஸ்தானில் ஏகப்பட்ட துயரங்களை அனுபவித்துவிட்டேன். என் நாட்டுக்குத் திரும்பிய பிறகுதான் நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். இப்போது சொர்க்கத்தில் இருப்பதைப் போல உணர்கிறேன். என்னை விடுவித்த அவுரங்காபாத் போலீசாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments