தீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்ன..?

0 16358
சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் தீரன் பட பாணியில் கொலை - கொள்ளையை அரங்கேற்றிய கொள்ளைன் என்கவுண்டர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை பிடிக்கும் முயற்சியில், ஒருவன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தீரன் பட பாணியில் அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வரும் தன்ராஜ், தருமகுளம் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார்.காலை 6 மணியளவில் அவரது வீட்டின் கதவு படபடவென வேகமாக தட்டப்பட்டுள்ளது. இவ்வளவு வேகமாக கதவுகளை தட்டுவது யார் என்று தெரிந்து கொள்ள தன்ராஜின் மனைவி ஆஷா கதவைத் திறந்துள்ளார். அப்போது ஆஷாவை தள்ளிக் கொண்டு தபதபவென 3 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியில் ஆஷா உறைந்து நின்ற நிலையில் கத்தியைக் காட்டி வீட்டில் நகைகள், பணம் எங்கு இருக்கிறது என கொள்ளையர்கள் கேட்டுள்ளனர்.

பயத்தில் ஆஷா கூச்சலிடவே, அவரது கழுத்தை கத்தியால் கொள்ளையர்கள் அறுத்துள்ளனர். இந்த நிலையில் தாயாரின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த மகன் அகிலை கொள்ளையர்கள் பிடித்துள்ளனர்.

கண்முன்னே தாய் கொடூரமாகக் கொல்லப்பட்டு கிடப்பதைப் பார்த்து ஆவேசமடைந்த அகில் கொள்ளையர்களை தாக்க முயற்சித்துள்ளார். இதனால் அந்தக் கும்பல் அகிலின் கழுத்தையும் கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளனர்.

வீட்டிற்குள் அலறல் சப்தம் கேட்டு அடுத்தடுத்து வந்த தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிக்கல் ஆகியோர் கழுத்துகளிலும் கொள்ளையர்கள் கத்தியை வைத்துள்ளனர்.

ஆஷாவையும் அகிலையும் கொலை செய்தது போல் உங்களையும் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி, நகைகளை எங்கே வைத்திருக்கிறீர்கள் என கொள்ளையர்கள் கேட்டுள்ளனர். அத்துடன் அவர்களை மேலும் அச்சுறுத்த நிக்கல் கையிலும் கொள்ளையர்கள் கத்தியால் கிழித்துள்ளனர். இதனால் அதிர்ந்துபோன தன்ராஜ், படுக்கறையிலுள்ள கட்டிலில் மெத்தைக்குக் கீழே உள்ள ரகசிய அறைகளில் நகைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

விரைந்து சென்ற கொள்ளை கும்பல், சுமார் 15 கிலோ நகைகளை அள்ளி இரண்டு பைகளில் நிரப்பிக் கொண்டு தன்ராஜின் காரிலேயே தப்பியுள்ளது. வீடு முழுவதும் சிதறிக் கிடந்த ரத்தக்களறிக்கு நடுவே கொலை செய்யப்பட்ட மகனின் சடலத்தைப் பார்த்து தன்ராஜ் கதறி அழுதார்.

சிறிது தூரம் சென்றதும் காரை டிராக் செய்து போலீஸ் வரக்கூடும் என அஞ்சிய கொள்ளை கும்பல், ஓலையாம்புத்தூர் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த வயலில் இறங்கி நடந்து மறுகரையிலுள்ள எருக்கூர் நோக்கி நடந்து சென்றுள்ளனர். அந்த நேரம் வயலுக்கு வந்த விவசாயிகள் சிலர், 3 பேரையும் பார்த்து யார் என விசாரித்துள்ளனர். அவர்கள் ஹிந்தியில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமுற்ற விவசாயிகள், போலீசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, மூவரும் தப்பிச் சென்றுவிடாமல் சுற்றிவளைத்துள்ளனர்.

விரைந்து வந்த போலீசரிடம் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மனிஷ், மணிப்பால், ரமேஷ் ஆகிய அந்த மூவரின் கைகளில் நகைகளுடன் கூடிய ஒரு பை இருந்த நிலையில், தன்ராஜ் வீட்டில் கொலை, கொள்ளையை அரங்கேற்றிய கும்பல் என்பதை போலீசார் உணர்ந்து கொண்டனர்.

மற்றொரு பை எங்கே என போலீசார் விசாரித்தபோது அந்தப் பையை வயலுக்குள் மறைத்துவைத்திருப்பதாகக் கொள்ளையர்கள் கூறவே, அந்த இடத்தைக் காட்டும்படி மணிப்பாலை மட்டும் மீண்டும் வயலுக்குள் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது போலீசாரைத் தாக்கிவிட்டு மணிப்பால் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் வந்ததாக தன்ராஜ் கூறிய நிலையில், மற்றொருவன் எங்கிருக்கிறான், நகைகள் அடங்கிய மற்றொரு பை அவனிடம் இருக்கிறதா என்பது குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

 காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொள்ளை கும்பலை சேர்ந்த மணிப்பால், மனீஷ், ரமேஷ் ஆகிய மூவரும் பக்கத்து ஏரியாவில் தங்கி ஆட்டோ மொபைல் கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். நகையை அடகு வைப்பது போல தன்ராஜின் கடைக்கு சென்று கடந்த 6 மாதங்களாக நோட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் என்று தன்ராஜுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரை பற்றி தெரிந்து கொண்டுள்ளனர்.

அது போல சம்பவத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு தான், வங்கி லாக்கரில் இருந்து தன்ராஜ் கிலோ கணக்கில் நகைகளை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கும் தகவல் கிடைத்தை அடுத்து அவரது வீட்டில் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான கருணாராம், கும்பகோணத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை கைது செய்தனர். கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரையும் இவன்தான் காரில் கொண்டு சென்று விட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments