டிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினத்தில் டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். அதன்படி, 3 வழித்தடங்களில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் அனுமதியில்லாத பல சாலைகளிலும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டிராக்டரில் டெல்லிக்குள் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நுழைந்தனர்.
சிங்கு எல்லை, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். பல இடங்களில் இருதரப்பினருக்கும் மோதல் மூண்டது.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.
பேரணியில் பங்கேற்ற சிலர், டிராக்டர்களை காவல்துறையினர் மீது மோதுவது போல் கண்மூடித்தனமாக ஓட்டினர்.
விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லியில் செங்கோட்டையை முற்றுகையிட்டும் அதன் மீது ஏறியும் போராட்டம் நடத்தினர். அங்கு தங்களது கொடியை பல இடங்களில் ஏற்றினர்.
செங்கோட்டையில் இருந்து அவர்களை வெளியேற்ற கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தினர்.
டெல்லி ஐடிஒ பகுதியில் டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் பலியானார். அந்த பகுதயில் போலீஸ் பேருந்து ஒன்றும் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டது.
இதனிடையே வன்முறையில் ஈடுபடுபவர்கள் விவசாயிகள் கிடையாது என்றும், அவர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகேத் தெரிவித்தார்.
டிராக்டர் பேரணி காரணமாக வாசிராபாத், புஸ்தா சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியில்பல மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களும் மூடப்பட்டிருந்தன. வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக, காசிப்பூர், சிங்கு உள்ளிட்ட சில இடங்களில் நள்ளிரவு வரை தற்காலிகமாக இணைய சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
Comments