மாறிவரும் காலநிலை..உருகிவரும் பனி..அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்

கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது, பனி பிரதேசங்களில் அதிக அளவு பனி உருகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலத்தில் உலகநாடுகளின் மிக பெரும் சவாலாக இருப்பது காலநிலை மாற்றம் தான். காலநிலை மாற்றத்தால் பூமியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, பூமி வெப்பமயமாகி, கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இயற்கை பேரழிவுகளை உலகநாடுகள் அவ்வப்போது சந்தித்து வருகின்றன.மேலும் இந்த காலநிலைமாற்றம் கடந்த 30 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,கிரையோஸ்பியர் என்ற ஐரோப்பிய இதழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி,1990 ஆண்டு முதல் தற்போது வரை 28 டிரில்லியன் மெட்ரிக் டன் பனி, பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளிலிருந்து உருகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனி உருகும் விகிதம், கடந்த முப்பது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது 57 சகவீதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அண்டார்டிகா, கிரீன்லாந்து மற்றும் மலை பனிப்பாறைகளில் உருகிய பனியினால், கடல் நீர் மட்டம் கடந்த 30 ஆண்டுகளில் 3.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் இந்த காலநிலை மாற்றத்தை குறித்து விஞ்ஞானிகள் பலரும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து இந்த காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்வீடனை சேர்ந்த உலகின் பிரபல இளம் சுற்றுசூழல் ஆர்வலரான கிரெட்டா துன்பர்க் திங்களன்று , உலகத்தலைவர்கள் அனைவரும் காலநிலை மாற்றத்தை பற்றி பேசுகிறார்கள் ஆனால் அதனை தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Comments