'குடியரசு தின அணிவகுப்புதான் என்னை ஐ.பி.எஸ் ஆக்கியது! '14 வயதில் திருமணம் 18 வயதில் இரு குழந்தைகள் பெற்ற அம்பிகா இப்போது'லேடி' சிங்கம்

0 12492

ஒரு குடியரசு தின அணிவகுப்பின் போது, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதை கண்டுதான், தானும் ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டுமென்ற ஆசையில் படித்து போலீஸ் அதிகாரியாக ஆனதாக மும்பை துணை கமிஷனர் அம்பிகா கூறியுள்ளார்.

தற்போது , மும்பை துணை கமிஷனராகவுள்ள அம்பிகா ஐ.பி.எஸ் திண்டுக்கலை சேர்ந்தவர். இவர், ஐ.பி.எஸ் ஆனதும் ஒரு பெரும் கதைதான். அம்பிகாவின் கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். திண்டுக்கல் பகுதியில் சிறு வயதிலேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விடும் வழக்கம் உண்டு. அம்பிகாவின் பெற்றோர் 14 வயதிலேயே போலீஸ்காரர் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். 18 வயதான போது, இரண்டு குழந்தைகளுக்கு அம்பிகா தாய். இந்த சமயத்தில், ஒரு குடியரசு தின விழா அணி வகுப்பை காண கணவருடன் அம்பிகா சென்றுள்ளார். அப்போது, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த மரியாதையை பார்த்து,' ஐ.பி.எஸ் அதிகாரியானால் இவ்வளவு மரியாதை கிடைக்குமா ' என்று வியந்து போனார்.image

பின்னர், வீடு திரும்பியதும் கணவரிடத்தில் . 'நானும் ஐ.பி.எஸ் அதிகாரியாகனும், எனக்கும் இன்று நான் குடியரசு தின அணி வகுப்பில் பார்த்தது போன்று மற்றவர்கள் சல்யூட் அடிக்கனும்... அதுக்கு நான் என்ன செய்யனும் ' என்று அப்பாவியாக கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த கணவரோ, 'அதுவெல்லாம் ஈசியான விஷயம் அல்ல. நீயோ பள்ளி படிப்பை கூட முடிக்காதவள் . பின்னர், எப்படி ஐ.பி.எஸ் படிப்பாய்' என்று கூறியுள்ளார். ஆனால், அம்பிகாவோ விடாப்படியாக தன் முடிவில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து, டியூசன் உதவியுடன் 10 ஆம் வகுப்பு முடித்தார். பிறகு, தொலை தூர படிப்பில் டிகிரியும் முடித்தார். அந்த நேரத்தில் யு.பி.எஸ்.சி பயிற்சி மையங்கள் திண்டுக்கல்லில் இல்லை. இதனால்,சென்னைக்கு வந்து தங்கி யு.பி.எஸ். மையத்தில் பயிற்சி பெற்றார். இந்த சமயத்தில் குழந்தைகளை கணவர் பார்த்து கொண்டார்.

முதல் முறை ஐ.பி.எஸ் தேர்வு எழுதினார். ஃபெயில் என்று ரிசல்ட் வந்தது. இரண்டாவது முறையும் அதுதான் முடிவு... மூன்றாவது முறையும் முடிவு மாறவில்லை. அம்பிகாவின் கணவர் ' ஒழுங்கா மூட்டை முடிச்சை கட்டி கொண்டு வீடு வந்து சேரு 'என்றார் எதிர்முனையில் இருந்து. ஆனால், அம்பிகாவோ நம்பிக்கை இழந்து விடவில்லை. கடைசியாக, ' ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்துடுறேன் 'என்று கணவரை சமதானப்படுத்தினார். கடந்த 2008 ஆம் ஆண்டு 4 - வது முறையாக ஐ.பி.எஸ் தேர்வு எழுதினார். இந்த முறை பிரிலிமினரி, மெயின் , இன்டர்வியூ என்று அனைத்திலும் ஒரே மூச்சில் தேர்வானார். பள்ளி படிப்பை கூட முடிக்காத அம்பிகா தன் தளராத நம்பிக்கையால் ஐ.பி.எஸ் அதிகாரியாக மாறி காட்டினார். அம்பிகாவின் முதல் போஸ்டிங் இந்தியாவின் க்ரைம் மாநகராக கருதுப்படும் மும்பையில்தான். தற்போது, வடக்கு மும்பை துணை கமிஷனராக உள்ள அம்பிகாவுக்கு லேடி சிங்கம் என்ற செல்லப்பெயரும் உண்டு. கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்மத் மகராஸ்டிரியன் என்ற அந்த மாநிலத்தின் உயரிய விருதும் அம்பிகாவுக்கு வழங்கப்பட்டது.

அம்பிகாவை பொறுத்த வரை, யாரையும் குற்றம் சுமத்தக்கூடாது என்பது கொள்கை. சிறு வயதில் தன்னை திருமணம் செய்து கொடுத்தற்காக தன் பெற்றோரை குற்றம் சாட்டவில்லை. மாறாக, தன் கணவர் உதவியுடன் ஐ.பி.எஸ் அதிகாரியாகி இன்று நட்சத்திர போலீஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments