பள்ளி ஆசிரியரிடம் ரூ.4.5 லட்சம் பறித்த பெண் காவல் ஆய்வாளர்..! தொடரும் அத்துமீறல்

0 12857

பள்ளி ஆசிரியரை கடத்தி வந்து நான்கரை லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், சென்னை வளசரவாக்கம் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சாத்தான்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள குப்பாபுரத்தை சேர்ந்தவர் சாலமோன் இவர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரியநாயகிபுரம் டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ந்தேதி அன்று இவரது மனைவியின் அண்ணன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த போது, அங்கு வந்த சென்னை வளசரவாக்கம் போலீசார், உறவினர் மூலமாக சாலமோனை ஊருக்கு வெளியே தனியாக வரவழைத்துள்ளனர்

அங்கு வைத்து சாலமோனிடம், அவரது சகோதரரின் பெயரில் உள்ள வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி செல்போனை பறித்துக்கொண்டதாகவும், சாலமோன் குடும்பத்தினருக்கோ உறவினர்களுக்கோ எவ்வித தகவலும் கொடுக்காமல் அவரை மிரட்டி வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு கடத்தி சென்றதாகவும் வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் நான்கு காவலர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

சகோதரனின் குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பொய்வழக்கு போடுவோம் என மிரட்டி உயிர் பயத்தை ஏற்படுத்தி சாலோமோனிடம் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆசிரியர் சாலமோன், இந்த புகாரில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

கடத்தலில் ஈடுபட்ட போலீசாரை பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது துறை ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலமோன் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் நீட்சியாக நடந்த போலீசாரின் பணம் பறிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments