பாலிசி பஜார் இல்லீங்க மோசடி பஜார்..! காப்பீட்டு பணம் சுருட்டல்

0 30691

லாரி உள்ளிட்ட கமர்சியல் வாகனங்களுக்கு போலியாக வாகன காப்பீடு வழங்கி, கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

வாகனம் விபத்தில் சிக்கி சேதமானால், திருடு போனால், பயணிகள் உயிரிழந்தால், விபத்தில் சிக்கும் பாதசாரிகள் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறுவதற்கு வாகன காப்பீடு உதவுகிறது.

வாகனம் மோதி மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பிற்கும் உதவும் வகையில் காப்பீடு விதிகள் கை கொடுக்கிறது. யூனைடெட் இந்தியா, நியூ இந்தியா அசுரென்ஸ், ஓரியண்டல் ஆகிய அரசு காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமான தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் உள்ளன.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் காப்பீடு பெறும் முறையில் உள்ள குளறுபடிகளை வைத்து, ஒரு கும்பல் பெரும் மோசடியில் இறங்கி பொதுமக்களின் பணத்தைக் கோடிக்கணக்கில் சுருட்டியது அம்பலமாகியுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் விபத்தில் சிக்கிய தனது லாரிக்கு காப்பீடு பெற முயன்றபோது தான், அவரிடம் இருப்பது போலிக் காப்பீடு எனத் தெரியவந்தது. மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான யூனைடெட் இந்தியா பெயரில் பெறப்பட்ட அந்த போலிக் காப்பீடு தொடர்பாக அவர் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றபிரிவின் சைபர் கிரைம் போலீசார் இந்த மோசடிக் கும்பலை சுற்றிவளைத்தனர்.

மோசடிக் கும்பலின் தலைவன் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன், ஏஜெண்ட்கள் ஆனந்த், கீரனூர் அன்சார் ஹரி ஜெயின், அலாவுதீன், செந்தில் குமார் மற்றும் சுப்பு என்கிற சுமதி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் ஏற்கனவே பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் ஏஜெண்ட்களாகப் பணிபுரிந்த அனுபவத்திலும், தொடர்பு மூலமும் இந்த மோசடியை கடந்த நான்கு வருடங்களாக செய்து வந்துள்ளனர். எந்த செல்போன் மூலம் காப்பீடு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, அதன் ஐ.பி முகவரி ஆகியவற்றை வைத்து இந்த கும்பலைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறிப்பாக லாரி போன்ற கமர்சியல் வாகனங்களுக்கு காப்பீடு பெறுவதென்றால் வாகனம் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் குறைவாக காப்பீடு பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி, லாரி உரிமையாளர்களிடம் வாகன விவரங்களைப் பெற்றுள்ளனர்.

பின்னர் பாலிசி பஜார் இணைய தளம் மூலம் ஆன்லைனில் இரு சக்கர வானத்திற்கான காப்பீடை லாரியின் பதிவெண்ணைக் கொடுத்து அதற்கான காப்பீடு நகலை பதிவிறக்கம் செய்துள்ளனர். பின்னர், பதிவிறக்கம் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்திற்கான காப்பீட்டில், லாரிக்கான காப்பீடு போல போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடிக் கும்பலிடம் இருந்து 9 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணம், மோசடி செய்த பணத்தில் வாங்கி குவித்த 133 சவரன் தங்க நகைகள், செல்போன், கார் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

ஆன்லைன் மூலம் வாகன காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, குறிப்பிடும் வாகன எண் போலியானதா? இரு சக்கர வாகனத்தின் எண் தானா ? என்பதை காப்பீடு நிறுவனங்களால் உறுதிப்படுத்த இயலாததால், போலிக் காப்பீடு தயாரிக்கும் கும்பலுக்கு சாதகமாக உள்ளது என்றும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இயங்கும் "வாகன்" என்ற இணையதளத்துடன், காப்பீடு நிறுவனங்கள் இணைக்கப்படாததால் போலி வாகன எண்களை சரிபார்க்க முடியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments