மக்களாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி : குடியரசுத் தினம்!

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்தியாவில் மக்களாட்சி மலர்ந்தது. அதுவே மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் தாங்கள் விரும்பிய ஆட்சியாளர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையே குடியாட்சி ஆகும்.
1947ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அதற்கு முன்பே, இந்தியா விடுதலை நாளை கொண்டாடியிருக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு லாகூரில் கூடியது. அதில், 'பூரண சுயராஜ்ஜியமே நம் லட்சியம்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த காலகட்டத்தில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. வறுமை ஒருபுறம் மக்களை வாட்டிக் கொண்டிருந்தது. அந்த சூழலிலும் நாடெங்கும் மக்கள் மத்தியில் சுதந்திர எழுச்சி தீ பிழம்பாய் கனன்று கொண்டிருந்தது. அதன் விளைவாக ஆங்காங்கே நடைபெற்றுவந்த போராட்டங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்நிலையில், மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினால், அது மேலும் வன்முறைக்கு வழிவகுத்துவிடும் என்பதை மகாத்மா காந்தி உணர்ந்தார். ஆகவே, வன்முறையை தவிர்க்கும் வகையில், விடுதலை எழுச்சியை அகிம்சை பாதையில் அழைத்துச்செல்ல அவர் விரும்பினார்.
1930ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதியன்று நாடு முழுவதும் விடுதலை நாள் கொண்டாடப்படவேண்டும் என காந்திஜி மக்களிடம் வேண்டுகோள் வைத்தார்.
அதன்படி, அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடத்தினர். அதில் மகாத்மா வழங்கிய சுதந்திரப் பிரகடனத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
அதில், அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், கலாச்சாரம் ஆகிய நான்கு விதத்திலும், நமது தாய் நாட்டிற்கு கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் நாம் செய்யும் துரோகம் என வலியுறுத்தி இருந்தது.
நாடு விடுதலை பெறுவதற்கு 16ஆண்டுகளுக்கு முன்பே, மகாத்மா ஏற்படுத்திய சுதந்திர நாள்தான் ஜனவரி 26ஆகும். இத்தகவலானது இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திடாத ஒன்று.
விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார். அதன் பின்னரே இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது ; பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசனமும் எழுதப்பட்டது. அவை இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சி மலர்ந்தது.
மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் அரசாகும். அதுவே குடியரசு ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்துக்கு வந்ததும் குடியரசுத் தினத்தன்றுதான்.
குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் ஆவார். அவற்றையே நம் தலைவர்கள் பின்பற்றினார்கள் என்பதுதான் வரலாற்று உண்மையாகும்.
1949ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் முதல் பிரதமரான நேரு தலைமையிலான அமைச்சரவையானது 1950 ஜனவரி 26ஆம் நாளை குடியரசு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
அதன்படி, நாட்டின் முதல் பிரதமரான நேரு, மூவண்ணக் கொடியான தேசிய கொடியை ஏற்றி, குடியரசு தினக் கொண்டாட்டத்தை கோலாகலமாக தொடங்கி வைத்தார்.
70ஆண்டுகளை கடந்தும் குடியரசு தினம் ஆண்டுதோறும் தவறாமல் கோலாகலமாக நடைபெற்று வருவது என்பது மக்களாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதிலும் மதச்சார்பற்ற நம் நாட்டில் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம் என்பது உலகுக்கே முன் உதாரணமாகும்.
உலகளவில் இந்தியா மிகப்பெரிய சனநாயக நாடாக திகழ்கிறது என்றால், நாட்டின் விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளின் தியாகமே அதற்கு முழுமுதற் காரணமாகும்.
Comments