தேர்தலில் அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது - முதலமைச்சர்

தமிழக அரசிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுத்து குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பொதுமக்களின் மனுக்களுக்கு 100 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழக அரசிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது மூன்று மாதத்தில் குறைகள் களையப்பட்டு வருவதாகவும், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலைப் பிரித்துப் பார்த்து மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Comments