மண மக்களை ஆசிர்வதிக்க பணம் கேட்டு திருநங்கைகள் தகராறு;போலீஸ் தாக்கியதாக சாலை மறியல்!

0 6782

தங்களை தாக்கிய போலீஸாரை கண்டித்து திருநங்கைகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரத்தில் இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன . இதனால், அங்கு திரண்ட திருநங்கைகள் கூட்டம் கூட்டமாக சென்று திருமணம் நடைபெறும் மேடையில் சென்று மணமக்களை ஆசிர்வதிப்பதாக கூறி பணம் வழங்க கேட்டுள்ளனர் . மணமக்களின் உறவினர்கள் திருமணம் நடக்கும்போது, ' ஏன் இப்படி அராஜகம் செய்கிறீர்கள் ' தட்டி கேட்டுள்ளனர். பின்னர், திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினரிடத்தில் திருநங்கைகளை குறித்து புகார் தெரிவித்துள்ளனர். திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் திருமணம் நடைபெற்ற இடத்துக்கு வந்து திருநங்கைகளை வெளியேறியுள்ளனர். அப்போது, திருநங்கைகளை சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த திருநங்கைகள் மேலும் ஏராளமான திருநங்கைகளுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திடீரென்று சாலை மறியலில் அமர்ந்தனர்.

மேலும், திருநங்கைகளை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷிமிட்டனர். கடலூர் புதுநகர் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்ட இடத்துக்கு சென்று அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர் . தங்களை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று திருநங்கைகள் உறுதியாக கூறினார்கள். இதனால் , அங்கு பதற்றம் தொற்றி கொண்டது. இனிமேல் போலீஸார் உங்களை தாக்க மாட்டார்கள். நீங்களும் அராஜகம் முறையில் யாரிடமும் நடந்து கொள்ளக் கூடாது என்று காவல் ஆய்வாளர் உறுதி அளித்தார். தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட திருநங்கைகள் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments