புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பதவியை ராஜினாமா செய்தார் - மேலும் ஒரு காங். எம்எல்ஏவும் ராஜினாமா

0 2956
புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பதவியை ராஜினாமா செய்தார் - மேலும் ஒரு காங். எம்எல்ஏவும் ராஜினாமா

புதுச்சேரியில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

2016 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நமச்சிவாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி காங்கிரஸ் - திமுக கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலுக்குப் பின், முதலமைச்சர் பதவி நாராயணசாமிக்கு வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்துக்கு அமைச்சரவையில் 2-வது இடம் வழங்கப்பட்டு, பொதுப்பணி, உள்ளாட்சி உள்ளிட்ட முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

மேலும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவராகவும் அவர் பதவி வகித்து வந்தார். மக்களவை தேர்தலுக்கு பின் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நமச்சிவாயத்திடமிருந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால், மேலும் அதிருப்தியடைந்த நமச்சிவாயம், 2 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, மாற்றுக் கட்சியில் இணைவதாகவும், கூடிய விரைவில் ராஜினாமா செய்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.

தொடர்ந்து நமச்சிவாயம் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். நமச்சிவாயத்தின் ஆதரவாளரும், மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான தீப்பாய்ந்தனும் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே நமச்சிவாயம் தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, 2 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றார். சுயநலத்துக்காக எம்.எல்.ஏக்கள் ராஜினமா செய்வது கட்சியையோ, ஆட்சியையோ எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments