தற்கொலை முயற்சியில் குடும்பத்தை இழந்தவர் மீண்டும் தற்கொலை!- நிர்கதியாக நிற்கும் 75 வயது முதியவர்

0 7773

சென்னையில் தற்கொலை முயற்சியில் மனைவி, மகள், மகனை பறி கொடுத்தவர் மீண்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவிக நகர் அருகேயுள்ள வெற்றி நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் பழனி என்பவர் தச்சு தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பவானி என்பதாகும். இந்த தம்பதிக்கு தேவதர்ஷினி என்ற மகளும் பிரகதீஷ் மகனும் உண்டு. இரு தளங்கள் கொண்ட கட்டத்தில் பழனி குடும்பத்தினர் வமுதல் மாடியில் வசித்து வந்தனர். தரை தளத்தில் பழனியின் தந்தை சண்முகம் வசித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 17- ஆம் தேதி மதியம் சண்முகம் மாடிக்கு சென்றபோது, படுக்கையில் பவானி தனது மகன், மகளுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில், விஷ பாட்டில் கிடந்தது. 2வது மாடியிலிருந்த பழனியின் அறைக்கு சென்றபோது, அவர் கையை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். வீட்டில் வளர்த்து வந்த வளப்பு நாய்க்கும் விஷம் வைக்கப்பட்டு அதுவும் இறந்து கிடந்தது.

இதனால், சண்முகம் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பழனியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த திருவிக நகர் போலீசார், 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக பழனி மனைவி மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதில், பழனியின் மனைவி, மகள், மகன் இறந்து போனார்கள். ஆனால், தீவிர சிகிச்சைக்கு பிறகு பழனி மட்டும் பிழைத்துக் கொண்டார். பழனி உயிர் பிழைத்த பிறகு தன் நண்பர் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும், தன் மனைவி குழந்தைகள் இறந்து போனதற்கு தானே காரணம் என்கிற மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தன் தந்தை சண்முகத்தை பார்த்து விட்டு வருவதாக நண்பரிடத்தில் கூறி சென்றுள்ளார். பின்னர், திருவிக நகரிலுள்ள தந்தை வீட்டுக்கு சென்றவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏற்கனவே, மருமகள், பேரன், பேத்தியை பறி கொடுத்த சண்முகம் தன் மகனின் உடலை பார்த்து கதறியது அந்த பகுதி மக்களிடத்தில் வேதனையை ஏற்படுத்தியது.. தற்போது, 75 வயதான முதியவர் சண்முகம் யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments