72வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

0 1205

நாட்டின் 72வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா நாடெங்கும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்பத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில், வீரர்களின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கிறார். 45 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணிவகுப்பு நீளம், வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒன்றரை லட்சம் பேர் பார்வையிடும் இந்நிகழ்ச்சியில், இந்தாண்டு 25 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்போர் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா முடியும் வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க அந்நிய சக்திகள் முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம், கடற்கரைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments