2011க்கு முன்னும் - பின்னும் தமிழகத்தை எடைபோடுங்கள்...முதலமைச்சர் வேண்டுகோள்!

2011க்கு முன்பும் 2011க்கு பின்பும் தமிழகம் எப்படி உள்ளது என்பதை மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலியங்குளத்தில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பேசிய அவர், கோவையில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க கூட்டு குடிநீர்த் திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என்றார். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாகவும் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்கும் அரசாகவும் அதிமுக அரசு உள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.
சிங்காநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், இந்தியாவில் அமைதிப்பூங்காவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு எனவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது எனவும் கூறினார். தமிழ்நாடு தான் தொழில் துவங்க உகந்த மாநிலம் எனக் கூறிய முதலமைச்சர், ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தை கோவையில் துவக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
தொடர்ந்து பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் பேசிய முதலமைச்சர், தனது மறைவிற்கு பிறகும் நூறாண்டுகளுக்கு அதிமுக ஆட்சி இருக்கும் என்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 2011க்கு முன்பும் 2011க்கு பின்பும் தமிழகம் எப்படி உள்ளது என்பதை மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அன்னூர் செல்லும் வழியில் கரியாம்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் வழிபாடு செய்த முதலமைச்சர், கோவிலுக்கு அருகேயுள்ள மலர்வன் என்ற அதிமுக தொண்டர் வீட்டில் தேநீர் அருந்தினார்.
மேட்டுப்பாளையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசின் தேர்தல் அறிவிப்புகள் அடித்தட்டு மக்கள் முதல் அனைவரும் மகிழ்ச்சி அடைய செய்வதாக இருக்கும் என்றார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் அனைவரையும் தாம் முதலமைச்சராக பார்ப்பதாகவும் அவர்களது கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் தாம் இருப்பதாகவும் கூறினார்.
துடியலூரில் மக்களிடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனத்துக்கு மானியம் என அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்றார்.
தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், மக்களிடம் உண்மையை பேச வேண்டும் என்றும் செய்ததைச் சொல்லி, சொல்வதையும் செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.
Comments