’குழந்தையை ஆசிர்வாதம் செய்தால் தங்க மோதிரம் பரிசு’ - ஆசை காட்டி மூதாட்டியிடம் நகை பறிப்பு!

0 11059

சென்னையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம், 'குழந்தையை ஆசிர்வாதம் செய்தால் தங்கம் மோதிரம் தருகிறோம்’ என்று அழைத்துச் சென்று நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை லாயிட்ஸ் சாலை துவாரகா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராவணம்மா (65). ராவணம்மா நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் சாலையோரம் நடந்து சென்ற ராவணம்மாவை வழிமறித்து, அருகிலிருந்த வீட்டை சுட்டிக் காட்டி, அங்குக் குழந்தைக்கான நிகழ்ச்சி ஒன்று நடப்பதாகவும், அந்த குழந்தையை ஆசிர்வதிக்க பெரியவர்களை குடும்பத்தினர் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை ஆசிர்வாதம் செய்தால் தங்க மோதிரம் கொடுப்பர் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மூதாட்டி குழந்தையை ஆசிர்வாதம் செய்வதற்கு சம்மதிக்க, அவரை அழைத்துச் சென்ற நபர் வீட்டிற்குள் கீழ் படியில் அமர வைத்துவிட்டு, யாரிடமோ பேசுவது போல பாவனையுடன் படியில் ஏறிச் சென்ற நபர், மீண்டும் மூதாட்டியிடம் வந்தார். குழந்தையின் பெற்றோர் பெரும் செல்வந்தவர்கள் எனவும், குழந்தையை ஆசிர்வாதம் செய்யும் முதியவர்களுக்குத் தங்க மோதிரம் தருவதால், மாடல் காண்பித்து வருவதாக மூதாட்டியின் கையிலிருந்த மூன்று மோதிரங்களையும் வாங்கிச் சென்றார். அந்த நபருக்காக நீண்ட நேரமாக மூதாட்டி அந்த வீட்டிலேயே காத்திருந்தார். ஆனால் அந்த நபர் மீண்டும் திரும்பி வரவில்லை.

அப்போது, அந்த வீட்டிலிருந்த காவலாளி தனியாக அமர்ந்திருந்த மூதாட்டியைப் பார்த்ததும் அழைத்து விசாரித்துள்ளார். அப்போதுதான், மூதாட்டி ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி புகார் அளிக்க மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், மூதாட்டிகளைக் குறிவைத்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சென்னை சிட்டி சென்டர் அருகே இது போன்ற நூதன நகை திருட்டில் சில ஈடுப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments