வழி நடத்திய கால்களை கட்டிக் கொண்டு அழுத குட்டியானை!- கேரள காட்டுக்குள் ஒரு கண்ணீர் சம்பவம்

திருவனந்தபுரம் அருகே, தாய் யானை இறந்தது தெரியாமல் உறங்குவதாக நினைத்து, தாயின் உடலை சுற்றி வந்து சத்தம் போட்டு எழுப்ப முயற்சித்த குட்டி யானையின் பாசப் போராட்டம் காண்போரைக் கண்கலங்க வைத்துள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே வனப்பகுதியிலிருந்து வாமனபுரம் ஆற்றுக்குத் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பிய 45 வயதான தாய் யானை ஒன்று மயக்கமடைந்து உயிரிழந்தது. தாய் உயிரிழந்தது தெரியாமல் ஒரு வயது கூட ஆகாத குட்டியானை, தாயைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து பிளிறியபடி எழுப்ப முயற்சி செய்தது. தாய் தூங்குவதாக நினைத்து தொடர்ந்து அதை எழுப்ப முயற்சித்து கொண்டே இருந்த காட்சியானது, காண்போரைக் கண் கலங்க வைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கேரள வனத்துறையினர் விரைந்து வந்து தாய் யானை உடலை மீட்க முயற்சி செய்தனர். குட்டி யானை தாயை விட்டு விலகாததால், மயக்க ஊசி செலுத்தி பிடித்து கோட்டூர் யானைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். தாய் யானையின் உடலை கூர்ஆய்வு பரிசோதனை செய்து, வனத்துக்குள் புதைத்தனர். உடல் கூராய்வு பரிசோதனையில் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தாய் இறந்தது கூட தெரியாமல், எழுப்ப முயற்சி செய்த குட்டி யானையின் பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.!
Comments