திரும்பும் பக்கமெல்லாம் தெறிக்கும் மீம்கள்.. இணையத்தை கலக்கும் பெர்னி சாண்டர்ஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் மிகவும் எளிமையாக அமர்ந்திருந்த மூத்த அரசியல்வாதி பெர்னி சாண்டர்ஸின் புகைப்படம் இணையத்தில் மீம்களாக வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு விழா கோலகலமாக நடந்து முடிந்தது. ஆனால் அதில் பங்கேற்ற ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர்களுள் போட்டியிட்ட ஒருவரான பெர்னி சாண்டர்ஸின் புகைப்படம் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அனைவரும் ட்ரெண்டிங் ஆடைகள், கோட் சூட் என அணிந்திருக்க பெர்னி மட்டும் குளிர்காலத்தில் அணியக்கூடிய ஸ்வட்டர், முகக்கவசம், துணியால் நெய்யப்பட்ட கையுறை என சாதாரண உடையில் கால் மேல் கால் போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.
கட்டுப்பாடுகள் இருந்தாலும் கோலகலமாக நடைப்பெற்ற பதவியேற்பு விழாவில் அமைதியுடன் அமர்ந்திருந்த பெர்னி சாண்டர்ஸ், விழாவில் பங்கேற்றவர்கள் முதல் உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கனக்கான மக்களையும் கவர்ந்தார். அதுமுதல் இந்த நொடி பொழுதுவரை இணையத்தில் மீம்களாக வைரலாகி கொண்டிருக்கிறார். விண்வெளியில் அமர்ந்து விட்டத்தை பார்ப்பதில் தொடங்கி கங்னம் ஸ்டைல் பாடலுக்கு ஆடுவது வரை விதவிதமாக உலகம் முழுவதும் இணையத்தில் மீம்களாக டிரெண்டிங்கில் இருக்கிறார் இந்த 79 வயது மனிதர்.
இப்படி தனது ஒற்றை லுக்கால் இணையத்தில் வைரலாகி இருக்கும் பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுள் ஒருவராவார். தற்போது சாமானியர்கள் முதல் கனடா நாட்டு பிரதமர் வரை என அனைவரின் கேலி பொருளாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் பெர்னி சாண்டர்ஸின் வாழ்க்கை எளிதில் கடந்து போக கூடியது அல்ல..
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மிக மூத்த அரசியல்வாதியான பெர்னி கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க அரசியல் மூலம் அந்நாட்டு மக்களின் மனதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சோசலிசத்திற்கு ஆதரவு கொடுக்கும் மிக குறைந்த அமெரிக்க அரசியல்வாதிகளுள் ஒருவரான இவரின் ஆரம்ப கால அரசியல் சுயேச்சையாகத்தான் தொடங்கியது. 40 ஆண்டு காலத்தில் அமெரிக்க பிரதிநிகள் சபைக்கு தேர்வான ஒரே சுயேச்சை என்றால் அது பெர்னி மட்டும்தான்.
மக்கள் மத்தியில் நன்மதிப்புடன் விளங்கிய அரசியல்வாதியான பெர்னி நடந்து முடிந்த அதிபர் தேர்தல் போட்டியிட விரும்பினார். அவர் இருந்த ஜனநாயக கட்சிக்குள் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டியில் பங்கேற்றார். பைடன், மைக் ப்ளூம்பெர்க் என சக போட்டியாளர்களுக்கு மத்தியில் பெர்னிக்கே அதிக ஆதரவு கிடைத்தது. மேலும் ஆப்பிரிக்க, லத்தீன், இந்திய அமெரிக்க குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த தலைவராக பெர்னி களத்தில் பார்க்கப்பட்டு வந்தார் பெர்னி சாண்டர்ஸ்.
அந்த நேரத்தில் தான் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நேரில் சென்று பெர்னியை சந்தித்து பைடனுக்காக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து பெர்னி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமுதல் ஜோ பைடனை முன்னிறுத்து வேலைகள் நடந்தன. இறுதியில் கட்சியின் நிர்பந்தம் காரணமாக பெர்னி தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜோ பைடன் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிபராக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் மிக எளிமையாக அமர்ந்திருந்த பெர்னி சாண்டர்ஸை கேலி செய்து மீம்களாக்கி வருகின்றனர். இந்தியாவிலும் அது குறைந்தபாடில்லை தியானம் செய்யும் பிரதமர் மோடியுடன் உட்கார்ந்திருப்பது முதல் வேளான் சட்டங்களுக்கு ஆதரவாக விவசாயிகளுடன் போராடுவது வரை என வைரலாகியுள்ளார். இதற்கிடையில் பதவியேற்பு விழாவில் அமர்ந்திருந்த பெர்னி சாண்டர்ஸின் வைரல் புகைப்படம் பொறித்த டீசர்ட், விற்பனைக்கு வந்த ஓரிரு நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
Comments