’கடிக்க வந்ததால் ஆத்திரம்...’ ரூ.500 கொடுத்து கூலிப் படை ஏவி நாயைக் கொன்றவர் கைது!

மதுரையில் 500 ரூபாய் கூலி கொடுத்து, மனிதரைக் கொள்வதைப் போல ஆள் வைத்து தெரு நாயை அடித்துக் கொன்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை, செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தெரு நாய் ஒன்றினை மனிதத்தன்மையற்ற முறையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலையிலேயே அடித்துக் கொன்று, பிளாஸ்டிக் பையில் நாயைக் கட்டி தூக்கிச்செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகப் பரவி வந்தது. இந்த சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில், விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நாயை அடித்துக் கொன்றவர் செல்லூர் கண்மாய் கரை கணேசபுரத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமல்ராஜைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, “சிவகாமி தெருவைச் சேர்ந்த முத்துசரவணன் என்பவர், தினமும் தன்னை இந்த நாய் கடிக்க வருவதாகக் கூறி ரூ. 500 கொடுத்துக் கொல்ல சொன்னார். கொரோனா காரணமாக வேலை இல்லாததால், அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு நாயைக் கொலை செய்தேன்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் முத்து சரவணனனையும் கைது செய்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசாரின் துரித நடவடிக்கையை விலங்குகள் நல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். நாயை அடித்துக்கொன்றவர்கள் கைது செய்யப்பட்டதோடு நின்றுவிடாமல், இதுபோன்ற படுபாதக செயல்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments