பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு

0 44362
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு

பிரபல கிறிஸ்தவ மதபோதகரும், இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரனின் சென்னை அடையாறு வீடு, அலவலகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமான ”இயேசு அழைக்கிறார்” என்கிற மத பிரச்சார அமைப்பை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு சொந்தமாக கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் தனியாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பால்தினகரன் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி கிடைத்து வந்துள்ளது. இந்த நிலையில், கல்வி நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம், ஜெப கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் பால் தினகரன் மீது புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், பிரச்சார கூடங்கள், கல்வி நிறுவனங்கள் என 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த மெகா ஐ.டி. ரெய்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனையில், வெளிநாடுகளில் இருந்து அறக்கட்டளைக்கு கிடைக்கும் நிதியுதவி தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை முடிவில் பால் தினகரனிடம் விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments