கள்ளச்சந்தை : மது பாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கியவர்களை, தடுத்த போலீசுக்கு நேர்ந்த பரிதாபம்

திண்டுக்கல் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கியவர்களை தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீஸ்காரரை அடித்து உதைத்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது இதனால் நேற்று மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் நேற்றிரவு மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மது பாட்டில்களை வாங்கினர். இந்த நிலையில், கள்ளச்சந்தையில் மது பானம் விற்பனை செய்வதற்காக சிலர் அதிகளவில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, வேடசந்தூர் - கரூர் சாலையில் 3225 எண் டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு தலைமை காவலர் மாரிமுத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சிலர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி கொண்டிருந்தனர் . தலைமைக் காவலர் மாரிமுத்து 'எதற்காக பெட்டி பெட்டியாக வாங்குகிறீர்கள் ' என்று விசாரித்துள்ளளார். அதற்கு அந்த கும்பல் , 'நாங்கள் அப்படித்தான் வாங்குவோம் அதைக் கேட்க நீ யார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு மாரிமுத்து நான் போலீஸ்காரன் என்று கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த அந்த கும்பல் காவல்துறையாவது வெங்காயமாவது என்று கூறி மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது. பின்னர், அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த காவல்துறையினர் டாஸ்மாக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீஸ்காரரை தாக்கியவர்கள் கருக்காம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது . இது தொடர்பாக, 3 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு, தலைமறைவானவர்களையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்
Comments