கேரளாவில் 670 தியேட்டர்களில் 500ல் மாஸ்டர்... சேட்டன்களும் திரையரங்குகளில் முற்றுகை!

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் மாஸ்டர் படத்தை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியானது. இந்த படத்தை காண காலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் திரண்டனர். தமிழகமெங்கும் அதிகாலை 4 மணி முதலே தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் அலை மோதினர். பல தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு பதிலாக முழுதாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றும் டிக்கெட்டுகள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போனதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது. அதோடு, தமிழகம் முழுவதுமே தியேட்டர்களில் நடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்து பால் ஊற்றினர். இந்த நிலையில், சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர் ஒருவர் தன் உயிரைப்பணயம் வைத்து கட்டவுட்டுக்கு பால் ஊற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை கோயம்பேட்டில் ரோகிணி தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரிலும் மாஸ்டர் படம் வெளியானது. படத்தை காண வந்த ரசிகர்கள் சிலர் தங்கள் கையில் பால் பாக்கெட்டுடன் வந்திருந்தனர். தியேட்டர் முன், விஜய் கட்டவுட்டுக்கு பால் ஊற்றினர். அப்போது, தியேட்டர் வாசலில் உள்ள வயிற்கதவு மேல் ஏறி கூர்மையான கம்பிகளுக்கிடையே நின்று கொண்டே இளம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யின் கட்டவுட்டுக்கு தன் கையில் வைத்திருந்த பால் பாக்கெட்டை உடைத்து ஊற்றினார். சற்று கால் வழுக்கினாலும் அந்த இளைஞர் கம்பியில் சிக்கி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார். ஆனாலும், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் விஜய் படத்துக்கு பால் ஊற்றிய அந்த ரசிகரை திரையரங்க ஊழியர்களும் தடுக்கவில்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல அண்டை மாநிலமான கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனால், கேரளாவில் உள்ள 670 தியேட்ர்களில் 500 தியேட்டர்களில்வ இன்று மாஸ்டர் படம் வெளியிடப்பட்டது. அஙகும் , கொரோனா காலமென்பதால் 50 சதவிகித இருக்கைகளில்தான் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்னர். காலை 9 மணியளவில் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தைக் காண கேரளாவில் இன்று ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது. தியேட்டர்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மாஸ்டர் படத்துக்காக 80 சதவிகித டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, வெள்ளம் என்ற மலையாள படம் வரும் 22 ஆம் தேதி வெளி வருகிறது. கொரோனா லாக்டௌனுக்கு பிறகு வெளியாகும் முதல் மலையாள திரைப்படம் ஜெயசூர்யா நடித்த வெள்ளம் ஆகும்.
Comments