கலர் கலர் காத்தாடி.. களைக்கட்டும் குஜராத் கடைவீதிகள்

0 488
காத்தாடி திருவிழாவை முன்னிட்டு, குஜராத்தில் காத்தாடி வியாபாரம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை போல, மற்ற  மாநிலங்களிலும் தை முதல் நாள், வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் அன்று பல கலை நிகழ்ச்சிகளும் , விளையாட்டு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.  அதே போல் மற்ற மாநிலங்களிலும் விவசாயிகளின் திருநாளான பொங்கல் பண்டிகை அவரவர் பாணியில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், குளிர்காலம் முடிவடைந்து அறுவடை காலம் தொடங்குவதை வரவேற்கும் வகையில் குஜராத்தில் ’மகாசங்கராந்தி’ (Mahasankranti) கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, குஜராத்தில் ஆண்டுதோறும் காத்தாடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
உத்தராயண்(Uttarayan) என்று அழைக்கப்படும்  இந்த காத்தாடி திருவிழா, குஜராத் மாநிலத்தில் பல நகரங்களில்  நடைபெறும். இதில் சர்வதேச காத்தாடி திருவிழா வழக்கமாக அகமதாபாத்தில் நடைபெறும். ஜப்பான் , இத்தாலி ,   கனடா , பிரேசில் , இந்தோனேஷியா , ஆஸ்திரேலியா , அமெரிக்கா மலேஷியா , சிங்கப்பூர் , பிரான்ஸ் , சீனா போன்ற பல  நாடுகளிலிருந்து மக்கள் இந்த விழாவில் பங்கேற்பது வழக்கம். கொரோனா அச்சம் காரணமாக இந்த வருடம் சர்வதேச காத்தாடி திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் குஜராத் மாநில நகரங்களில் மகாசங்கராந்தி’ பண்டிகை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ராஜ்கோட் சந்தையில் காத்தாடி வியாபாரம் கலைக்கட்ட  தொடங்கியுள்ளது. வண்ணமயமாக விற்கப்படும் காத்தாடிகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 
இங்கு 15000க்கும் மேற்பட்ட காத்தாடி வகைகள் விற்கப்படுகின்றன. அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட காத்தாடி, கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் காத்தாடிகள் பெரும் அளவில் விற்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போல் , பஞ்சாப் மாநிலத்திலும் ’லோஹ்ரி’(Lohri) பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் காத்தாடி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு பஞ்சாபில் காத்தாடி நூல் விற்பனை தொழில் சற்று நலிவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் சீன நூல்கள் விற்கப்படுவதால், காத்தாடி நூல் தயாரிக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக நூல் தயாரிக்கும் தொழிலாரல்கள் தெரிவித்துள்ளனர்.
கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, காத்தாடி திருவிழாக்களின்போது  மாஞ்சா தடவிய நூல்களால் பல பறவைகள் கொல்லப்படுவதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். என்னதான் நைலான் நூல்களுக்கு பதிலாக பருத்தி நூல்கள் பயன்படுத்தப்பட்டாலும், பறவைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் காத்தாடி பண்டிகைகளால் பறவைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments