தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்..!

0 4465
தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 நாட்களாக மழை பெய்வதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும் அவற்றையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 19 சென்டிமீட்டரும், மணிமுத்தாற்றில் 17 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தொடர்மழைக்கு முன்பே பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் ஏற்கெனவே நிரம்பியிருந்தன. இதனால் பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள வெள்ளம் அகத்தியர் அருவியை மூழ்கடித்தபடி பாலருவி போலப் பாய்ந்து செல்கிறது.

பாபநாசம் தலையணை, கோவில் அருகே உள்ள படித்துறை ஆகியவற்றை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்வதால் அப்பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அணையின் 7 மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஆற்றுப் பாலத்தில் வெள்ளம் மோதியதில் நடைபாதைக்கான தளக்கற்கள் அனைத்தும் பெயர்ந்துள்ளன.

பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்றிரவு நிலவரப்படி மொத்தம் 51 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மணிமுத்தாறு, தாமிரபரணி ஆற்றில் கலக்குமிடம் கடல்போல் காட்சியளித்தது. இவை தவிரவும் கடனா ஆறு, கருப்பாறு, ராமநதி ஆகியவற்றில் இருந்தும் வந்த நீர் தாமிரபரணி ஆற்றில் கலந்ததால் முக்கூடல் காவல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு காவல்நிலையத்தைப் பார்வையிட்டார்.

திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே கருப்பந்துறையில் உள்ள பாலத்தின் மட்டத்தையொட்டித் தண்ணீர் பாய்வதால் அந்தப் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. குறுக்குத் துறை முருகன் கோவிலும் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கருப்பந்துறை, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வெள்ள நிலைமை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments