தெருக்களும் இல்லை, கார்களும் கிடையாது... 500 பில்லியன் டாலர்கள் மதிப்பில் சவூதி அமைக்கும் சூப்பர் சிட்டி!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 500 பில்லியன் டாலர் முதலீட்டில் கார்பன் இல்லாத, பசுமை நகரம் அமைப்பதற்கான திட்டத்தை சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தீட்டியுள்ளார். சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கக் கூடிய வகையில் கட்டப்படும் இந்த நகரில் தங்கவைக்க முடியும்; 100 சதவிகிதம் கார்பன் தவிர்க்கப்பட்ட நகராக விளங்கும்.
மேற்காசிய நாடான சவூதி அரேபியாவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்தே உள்ளது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் இருப்பு வெகு வேகமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் 2060 - ம் ஆண்டுக்குள் உலகிலுள்ள புதை படிவ எரிபொருள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. அதனால், சவூதி அரேபியா கச்சா எண்ணெய் வருவாயை மட்டும் நம்பியிருக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, Vision 2030 எனும் பெயரில் பல்வேறு திட்டங்களை 2017 - ம் ஆண்டு சவூதி அரேபியா அறிவித்தது.
அவற்றில் ஒன்று தான் நியோம் நகரம். செங்கடலை ஒட்டிய பாலைவனப் பகுதியில் 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவில், நியோம்’ என்ற பெயரில் நவீன நகரத்தை சவுதி அரேபியா உருவாக்குகிறது. இந்த நகரம், பறக்கும் டாக்சிகள், வீடுகளில் ரோபோ உதவியாளர்கள் என நவீன வசதிகளுடன் உருவாகிறது. இந்தப் புதிய நகரத்தின் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டில் தொடங்கி 2025- ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு, 26,500 சதுர கி.மீ பரப்பளவில் தொழில்துறை மற்றும் தளவாடப் பகுதிகளைக் கொண்ட உயர் தொழில்நுட்ப மண்டலங்கள் அமைய உள்ளன.
இந்தப் புதிய நகரம் குறித்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், “மொத்தம் 170 கி.மீ. நீளத்துக்கு 10 லட்சம் பேர் வசிக்கக் கூடியதாக இந்தப் புதிய நகரம் அமையும். இயற்கையை 95 சதவீதம் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். இந்த நகரில் கார்கள், தெருக்கள் இருக்காது. கார்பன் வாயுக்கள் வெளியேற்றமும் இருக்காது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக நியோம் நகர நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிகள், சுகாதார மையங்கள், அதிவேகப் போக்குவரத்து என்று அனைத்து வசதிகளும் கொண்ட பசுமை நகராக இந்த நகரம் அமையிம். இந்த நகரில் 20 நிமிடங்களுக்குள் நகரத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று விடலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த நகரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். 2030 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நியோம் நகரின் பங்களிப்பு மட்டும் 4,800 கோடி டாலராக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நகரம் ஒரு துணிச்சலான கனவு என்று சவூதி அரேபியா தெரிவித்தாலும், இந்தத் திட்டம் தேவையான முதலீட்டை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments