விளையும் பயிர் முளையிலேயே தெரியும் .... வியந்து போய் பாராட்டிய சைலேந்திரபாபு!

0 8154
கழிவுநீர் சாக்கடையை மூடிய குழந்தைகளை பாராட்டும் சைலேந்திரபாபு

மழையின் போது, திறந்து கிடந்த கால்வாயை மூடி சென்ற இரு மழலைகளை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்துள்ளார் தீயணைப்புத்துறை டி.ஜிபி. சைலேந்மிரபாபு 

சமீபத்தில் நொளம்பூரில் பைக்கில் சென்று கொண்டிருந்த கல்லூரி பேராசிரியை மற்றும் அவரின் மகளும் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய கோர மரணங்களுக்குப் பிறகும் நம்மில் எத்தனை பேர் சமூக பொறுப்புடன் செயல்படுகிறோமா... என்றால் அது கேள்விக்குறிதான். சென்னை நகரமெங்குமே ஆங்காங்கே கழிவு நீர் கால்வாய்கள் திறந்துதான் கிடக்கின்றன. கடந்த 8 - ஆம் தேதி சென்னையில் மழை கொட்டியது. இந்த சமயத்தில் , கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் சாலையோரத்தில் திறந்து கிடந்த கழிவு நீர் கால்வாயை கண்டதும் நமக்கென்ன என்று சாதாரணமாக கடந்து போய் விடவில்லை.

திறந்து கிடந்த கால்வாயை கண்டதும் இரு குழந்தைகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். பின்னர், சாலையோரத்தில் இருந்த பேரி கார்டை எடுத்து கழிவு நீர் கால்வாயை மூடி வைத்து விட்டு சென்றனர். இதை வீடியோவாக எடுத்தவர்கள் இணையத்தில் பதிவேற்ற , அந்த வீடியோ இணையத்தில் பரவிக் கொண்டிருந்தது. கொட்டும் மழையில் அக்காள் பேரி கார்டை எடுத்து கால்வாயை மூட அவரின் தம்பி மழையில் தன் சகோதரி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளை பார்த்து பலரும் புல்லரித்தனர். இந்த சின்ன வயதிலேயே இத்தகைய பொறுப்புணர்வா என்று அந்த குழந்தைகள் யார் என்று தெரியாமலேயே அவர்களை பாராட்டிக் கொண்டிருந்தனர். வாயார வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையால் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தீயணைப்புத்துறை  டி.ஜி.பி சைலேந்திரபாபுவும் தன் பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.' குழந்தைகளின் சமுதாயப்பொறுப்பு வியக்க வைக்கிறது. இவர்களுக்கு சல்யூட் .இவர்களை சந்திக்க விரும்புகிறேன்' என்றும் சைலேந்திரபாபு கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகளின் குழந்தைகள் யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கினர்.

இத்தகைய நற் செயலை செய்ததுசென்னை முடிச்சூர் அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார்- கிருஷ்ணவேனி தம்பதியின் குழந்தைகள் தேவயாணி மற்றும் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று அந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் நேரில் அழைத்து மனதார பாராட்டினார். அப்போது, இருவருக்கும் பரிசுப் பொருள்கள், தலா ரூ. 2,000 ரொக்கப்பரிசு அளித்தார். மேலும், குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கு தேவையான எந்த உதவி என்றாலும் தன்னை அழைத்து பேசலாம் என்று கூறி தன் செல்போன் எண்ணையும் குழந்தைகளின் பெற்றோரிடத்தில் சைலேந்திரபாபு வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments