தசைபிடிப்புடன் போராட்டம் நடத்திய ஹனுமா விகாரி பிரிஸ்பேன் டெஸ்டில் விலகல்'; இங்கிலாந்து தொடரும் டவுட்!

0 6685
தசைபிடிப்புக்கு சிகிச்சை பெறும் ஹனுமா விகாரி

சிட்னியில் நேற்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்த ஹனுமா விகாரி தசைபிடிப்பு காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த ஹனுமா விகாரியும் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை தடுத்தனர். ஆஸ்திரேலிய வீரர்கள் வேகமாக வந்து பந்து வீசினாலும் விகாரியும் அஸ்வினும் கட்டையை போட்டே வெறுப்பேற்றினார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் விகாரியையும் அஸ்வினையும் ஸ்லெட்ஜிங் செய்து கவனத்தை திசை திருப்ப முயன்றாலும் இருவரும் கட்டைய போடுவதில் இருந்து தங்கள் கவனத்தை சிதறவிடவில்லை. தங்கள் விக்கெட்டையும் விட்டுக் கொடுக்கவில்லை. கடைசி வரை விகாரியும் அஸ்வினும் களத்தில் நின்று விட்டதால் சோர்வடைந்த ஆஸ்திரேலிய அணி கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் பாக்கியிருந்த நிலையில், டிராவுக்கு ஒப்புக் கொண்டது. ஆட்டம் சமனில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்த விகாரி தசை பிடிப்புடன்தான் இந்த ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இதனால், ஓடி ரன் எடுக்க முடியாத நிலையில் கடைசி வரை வலியுடன் போராடியதோடு, ஆட்டத்தை சமனில் முடிக்கவும் உதவினார். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 161 பந்துகளை சந்தித்த  விகாரி 23 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டையை போட்டார். சிட்னி டெஸ்ட் ஆட்டத்தில் ஆடாமலேயே ஹீரோவாக மாறிய  விகாரி தசை பிடிப்பு காரணமாக பிரிஸ்பேனில் வரும் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள 4- வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

சிட்னியில் கடைசி நாள் ஆட்டம் முடிந்தவுடன், அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட் விரைவில் வெளி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பி.டி.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்  விகாரிக்கு தசைபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நன்றாக குணமடைய குறைந்தது 4 வாரங்கள் பிடிக்கும் என்றும் பிரிஸ்பேன் டெஸ்ட் மட்டுமல்லாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தொடரின் போது,  இந்திய அணியில் வீரர்கள் யாராவது காயமடைந்தால் ஒருவேளை ஹனுமா விகாரி அழைக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியிலிருந்து விகாரி விலகியுள்ளதால், விரித்திமான் சாகாவை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைத்து விட்டு , ரிசப் பண்டை முழு நேர பேட்ஸ்மேனாக களமிறக்க வாய்ப்புள்ளது. பிரித்திவி சாகா அணியில் சேர்க்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments