மறுமணம் செய்த தந்தை வீட்டை விட்டு வெளியேற்றியதால், நள்ளிரவில் தாயைத் தேடி அலைந்த குழந்தைகள்

மறுமணம் செய்து கொண்டு தன் குழந்தைகள் இருவரையும் தந்தை துரத்தியதால் நடு இரவில் தாயை தேடி குழந்தைகள் அலைந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் - மீனாட்சி தம்பதியினர். இவர்களுக்கு 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். செல்வம் வீடு, வீடாக சென்று மிக்சி, கிரைண்டர் சரி செய்யும் பணி செய்து வந்தார். மீனாட்சி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
திருப்பூர் மாவட்டம் பெருதாநல்லூர் அருகே, வாஷிங்டன் நகரில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் மறுமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தந்தை செல்வத்துடன் குழந்தைகள் இருவரும் வசித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் மறுமணம் செய்த மனைவியின் பேச்சை கேட்டு குழந்தைகள் இருவரையும் தாய் மீனாட்சியிடம் செல்லுமாறு செல்வம் விரட்டியடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தைகள் இருவரும் தஞ்சாவூரில் பஸ் ஏறி, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தாயுடன் இருந்த பகுதியான வாஷிங்டன் நகர் பகுதிக்கு நள்ளிரவில் வந்தனர். அங்கு வந்து அண்ணன், தங்கை இருவரும் தாயை தேடியுள்ளனர். ஆனால் தாயை கண்டுபிடிக்க முடியாமல் இரவு நேரத்தில் தவித்த இருவரும் ஓரிடத்தில் தயங்கி நின்றுள்ளனர். இவர்கள் இருவரும் தனியாக நிற்பதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் அவர்கள் மீது பரிவு கொண்டு தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் காவல்நிலைய போலீஸார் அண்ணன் தங்கை இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை தொடர்ந்து, குழந்தைகளின் தந்தை செல்வத்தின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, காவலர்கள் குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தந்தையால் துரத்தப்பட்டு, தாயை தேடி நள்ளிரவில் குழந்தைகள் அலைந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments