கொரோனா தடுப்பூசி முதற்கட்ட செலவை அரசே ஏற்கும்..!

0 1789

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் மிகப்பெரிய திட்டம் வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு போடப்படும் தடுப்பூசி செலவை மத்திய அரசே ஏற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், வரும் 16-ம் தேதி முதல் உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்க உள்ளது.

இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர், முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களுக்குள் மொத்தம் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பை ஒருங்கிணைந்து எதிர்கொண்டது திருப்தி அளிப்பதாக கூறிய பிரதமர், அதன் பலனாக இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகளுமே இந்தியாவில் தயாரிக்கப்படுவதை பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் போது அரசியல்வாதிகள் இடையில் நுழைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments